பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்ற அரசு அறிவித்த 2 நாள் கெடு இன்றுடன் முடிகிறது. நாளை முதல் புதிய பிரச்சனை உருவாகப்போகிறது.
கடந்த 8ம் தேதி கருப்பு பணம் பதுக்குதல், கள்ள நோட்டு புழக்கம் மற்றும் தீவிரவாத செயல்களுக்கு நிதியளிப்பு போன்ற குற்ற செயல்களை தடுக்கும் நோக்கில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார்.
தற்போது இருப்பில் உள்ள 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை டிசம்பர் 30ம் தேதி வரை வங்கிகளில் மாற்றி கொள்ளலாம் எனவும் கூறினார்.
இந்த பழைய நோட்டுகளுக்கு பதிலாக கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் ஏற்கனவே இருந்த 1000 ரூபாய் நோட்டுகள் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு விட்டன.
இதற்கிடையே பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை மத்திய – மாநில அரசுகளுக்கான பல்வேறு வரி, அபராதம், கட்டணங்களுக்காக செலவழிக்கலாம் என அறிவித்தது.
மேலும், அதன்படி தண்ணீர் மற்றும் மின் வாரியங்களில் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் ஏற்று கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயன்பாடு அனைத்தும் இன்று நள்ளிரவு வரை மேற்கொள்ளப்படும்.
முன்னதாக பெட்ரோல் பங்க், அரசு மருத்துவமனைகள், பால் பூத்கள் உள்ளிட்ட சில இடங்களில் மட்டுமே பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகள் பெறப்படும் என அரசு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
