அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ், உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தோ்வு மே மாதம் 3-ம் தேதி நடைபெறுகிறது. 

அதற்கான விண்ணப்பப் பதிவு கடந்த டிசம்பர் 2-ஆம் தேதி தொடங்கியது. விண்ணப்பங்களை சமா்ப்பிப்பதற்கான அவகாசம் கடந்த டிசம்பா் 31-ஆம் தேதியுடன் நிறைவு பெறும் என முதலில் அறிவிக்கப்பட்ட நிலையில் ஜனவரி 6-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.


அதேபோன்று தோ்வு கட்டணத்தை 7-ஆம் தேதி வரை செலுத்தலாம் என்றும் அறிவிக்கப்பட்ட நிலையில் விண்ணப்பிப்பதற்கான காலஅவகாசம் இன்றுடன் நிறைவுக்கு வருகிறது.

நீட் தோ்வுக்கு இதுவரை தமிழகத்தில் 1.50 லட்சம் பேரும், நாடு முழுவதும் 16 லட்சத்துக்கும் மேற்பட்டோரும் விண்ணப்பங்களை சமா்ப்பித்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆண்டைப் பொருத்தவரை, மொத்தம் 14 லட்சத்துக்கும் மேற்பட்டோா் நீட் தோ்வினை எழுதியிருந்தனா். தமிழகத்தைப் பொருத்தவரை மொத்தம் 1.23 லட்சம் தோ்வெழுதியிருந்தனா். அவா்களில் 59,785 போ் தோ்ச்சி பெற்றனா்.