To save cows VHP ditribute Trishul to youngsters
பசுக்களைப் பாதுகாக்க, லவ் ஜிகாத்தை எதிர்க்க தொண்டர்களுக்கு ‘திரிசூலம்’…இந்து அமைப்புகள் தொண்டர்களுக்கு வழங்கியது
நாட்டில் உள்ள பசுக்களை பாதுகாக்கவும், லவ் ஜிகாத்துக்கு எதிராகப் போராடவும் 75 தொண்டர்களுக்கு ‘திரிசூலங்களை’ விஸ்வ இந்து பரிசத் அமைப்பும், பஜ்ரங் தள் அமைப்பும் வழங்கின.
குஜராத் மாநிலம், காந்திநகரில் திங்கள்கிழமை நடந்த திரிசூலம் தீக்சா நிகழ்ச்சியில் தொண்டர்களுக்கு இந்த ஆயுதங்கள் வழங்கப்பட்டன.
லவ் ஜிகாத்
இந்த திரிசூலங்கள் மூலம் பசுக்களை பாதுகாக்க வேண்டும், லவ் ஜிகாத்துக்கு எதிராக போராட வேண்டும், கல்வி நிலையங்களுக்கு அருகே இருக்கும் ரோமியோக்களை விரட்ட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
4 ஆயிரம்
இது குறித்து விஸ்வ இந்து பரிசத் பொதுச்செயலாளர் மாகாதேவ் தேசாய் கூறுகையில், “ கடந்த இரண்டரை ஆண்டுகளாக ஏறக்குறைய 4 ஆயிரம் திரிசூலங்களை எங்கள் அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கு காந்தி நகர் மாவட்டத்தில் வழங்கி இருக்கிறோம். கடந்த 6 மாதங்களாக திரிசூலம் தீக்சா நிகழ்ச்சி நடத்தி வருகிறோம். இதுவரை 700 பேருக்கு திரிசூலம் வழங்கி இருக்கிறோம்.
அலங்காரப் பொருள் இல்லை
இந்த திரிசூலங்கள் வீட்டில் அலங்காரப்பொருளாதார வைக்கக்கூடாது, இதை எதற்காக பயன்படுத்த வேண்டும் என்று இளைஞர்களுக்கு தெளிவாகக் கூறி இருக்கிறோம்.
ஆயுதம் இல்லை
இந்த திரிசூலங்களை ஆயுதமாகக் கருதக்கூடாது. அரசு தடைவிதித்துள்ள ஆயுதங்களின் அளவில் இருந்து குறைவாகவே இது வடிவமைக்கப்பட்டுள்ளது. போலீசார் குஜராத்தில் பசுக்களை பாதுகாக்க தவறிவிட்டதால், இந்து அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள் பசுக்களை பாதுகாக்க களத்தில் இறங்கிவிட்டார்கள்.
சக்தி, நம்பிக்கை
மேலும், லவ் ஜிகாத்துக்கு எதிராகவும், கல்வி நிலையங்கள் அருகே பெண்களுக்கு தொல்லை கொடுக்கும் இளைஞர்களை அடக்கும் ‘ஆன்ட்டி ரோமியோ’படையாகவும் இந்த இளைஞர்கள் செயல்படுவார்கள். திரிசூலம் என்பதை நம்பிக்கை, சக்தியின் அடையாளமாக பார்க்க வேண்டும்’’ எனத் தெரிவித்தார்.
நடவடிக்கை
இளைஞர்களுக்கு திரிசூலம் வழங்கப்பட்டது குறித்து காந்திநகர் போலீஸ்சூப்பிரெண்டு வீரேந்திரசிங் யாதவ் கூறுகையில், “ சட்டம் அனைவருக்கும் சமம்தான். இளைஞர்கள் சட்டவிரோதமாக ஆயுதங்களை பொது இடங்களில் கையில் வைத்து இருக்க கூடாது. திரிசூலத்தை இளைஞர்கள் வைத்து இருந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ எனத் தெரிவித்தார்.
