"உங்க ஆட்சியில் தான் நடந்திருக்கு பவன்" திருப்பதி லட்டு விவகாரம் - பொங்கியெழும் பிரகாஷ் ராஜ்!
Actor Prakash Raj : திருப்பதி லட்டு விவகாரத்தில், பிரபல நடிகர் பிரகாஷ் ராஜ், ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யானை சாடி பேசியுள்ளார்.
இந்திய அளவில் என்பதை தாண்டி, உலக அளவில் பிரசித்தி பெற்ற ஒரு கோவில் தான் திருப்பதி ஏழுமலையான் கோவில். "திருப்பதி சென்று வந்தால் திருப்பம் நேரும்" என்று சொல்வார்கள், அந்த அளவிற்கு ஆண்டுக்கு பல லட்சம் பக்தர்கள் சென்று தரிசிக்கும் இந்தியாவின் மிக முக்கிய புண்ணிய ஸ்தலங்களில் திருப்பதியும் ஒன்று.
ஆனால் இப்போது ஒட்டுமொத்த இந்தியாவே பரபரப்போடு உற்றுநோக்கும் ஒரு இடமாக மாறி இருக்கிறது திருப்பதி, காரணம் அக்கோவிலில் பக்தர்களுக்கு வழங்கப்பட்ட லட்டுவில், நெய்க்கு பதிலாக விலங்குகளின் கொழுப்பு சேர்க்கப்பட்டிருப்பதாக பரபரப்பு தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. பொதுவாக பக்தர்களுக்கு அளிக்கப்படும் அதே லட்டுகள் தான், கடவுளுக்கும் அங்கு பிரசாதமாக அளிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
திருப்பதி லட்டு பிரசாதத்தில் அசைவமா? பரபரப்பை கிளப்பிய ஆந்திர முதல்வர்!
இந்த சூழலில் தான், தேசிய பால்வள மேம்பாட்டு நிறுவனம் ஒரு பரபரப்பு அறிவிப்பை வெளியிட்டது. அதில் திருப்பதி தேவஸ்தானத்தில் அளிக்கப்படும் லட்டுவில் பன்றி மற்றும் மாட்டின் கொழுப்பும், சோயா பீன்ஸ், சூரியகாந்தி மற்றும் மீன் எண்ணெய் உள்ளிட்டவையும் கலக்கப்பட்டு இருப்பதாக அதிர்ச்சி தரும் தகவலை வெளியிட்டது.
இந்த விவகாரம் திருப்பதி கோவிலில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்திய அதே நேரத்தில், ஆந்திர அரசியலிலும் மிகப்பெரிய பூகம்பத்தை கிளப்பியது. மேலும் ஆந்திராவின் தற்போதைய முதல்வர், சந்திரபாபு நாயுடு இந்த விவகாரத்தில் முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.
அவருடைய ஆட்சி காலத்தில் தான் இப்படி பயங்கரமான விஷயம் ஒன்று நடந்திருப்பதாகவும் கூறினார். இந்நிலையில் இந்த விவகாரம் பற்றி தனது கருத்தினை வெளியிட்டு இருக்கும் ஆந்திராவின் துணை முதல்வர் மற்றும் நடிகர் பவன் கல்யாண், "திருப்பதி கோவிலில் அளிக்கப்படும் லட்டுக்களில் நெய்க்கு பதிலாக விலங்குகளின் கொழுப்பு சேர்க்கப்பட்டிருப்பது மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது".
"இனி நாடு முழுவதும் உள்ள கோவில்களில் இதுபோன்ற செயல்கள் நடைபெறாமல் இருக்க அதற்காக தனியே கமிட்டி ஒன்று அமைக்க வேண்டும். அதாவது "சனாதன தர்ம ரக்ஷனா வாரியம்" என்ற ஒன்றை உடனடியாக துவங்க வேண்டும்" என்று கூறியிருந்தார். சனாதன தர்மத்தை இழிவு படுத்தும் வகையில் நடக்கும் இந்த விஷயங்களை முடிவு கட்ட நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்றும் அவர் தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார்.
இந்த சூழலில் பவன் கல்யாணின் இந்த பதிவுக்கு பதிலடி கொடுத்துள்ள பிரபல நடிகர் பிரகாஷ்ராஜ், "மாண்புமிகு துணை முதல்வர் அவர்களே.. இந்த விஷயம் உங்களுடைய ஆட்சி காலத்தில் தான் நடந்திருக்கிறது. ஏற்கனவே நாட்டுக்குள் பல சிக்கல்கள் இருக்கும் நிலையில் நீங்கள் புதிய பிரச்சினைகளை இங்கு கொண்டு வராதீர்கள். முதலில் இந்த செயலை செய்தது யார் என்பதை கண்டுபிடித்து அவர்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்கும் பணியில் உங்கள் சிந்தனை இருக்கட்டும்" என்று கடுமையாக சாடி பேசியுள்ளார்.
பகீர் கிளப்பிய திருப்பதி லட்டு விவகாரம்.. உடனே விரிவான அறிக்கை வேண்டும் - சுகாதார அமைச்சகம்!