திருப்பதி ஏழுமலையானுக்கு 2.5 கோடி மதிப்பிலான தங்க கை கவசங்களை தமிழக பக்தர் காணிக்கையாக அளித்துள்ளார். 

ஆந்திராவில் அமைந்துள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு உலகம் முழுவதிலிருந்தும் கோடிக்கணக்கான பக்தர்கள் நாள்தோறும் வந்து செல்கின்றனர். பக்தர்கள் எண்ணிக்கையை போல் காணிக்கையும் அதிகமாகும். பலர் பணம், பொருட்கள் மட்டுமின்றி தங்க வைர நகைகளும் காணிக்கையாக செலுத்தி வருகின்றனர்.

 

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக, தேனியைச் சேர்ந்த தங்கதுரை என்ற பக்தர் நேற்று முன்தினம் திருமலைக்கு வந்தார். தொடர்ந்து அவர் நேற்று காலை ஏழுமலையானை தரிசனம் செய்தார். பின்னர் வேண்டுதலை நிறைவேற்றிய ஏழுமலையானுக்கு 2.5 கோடி மதிப்பில், 5.5 கிலோ தங்கத்தால் செய்யப்பட்ட கைகளை காணிக்கையாக தேவஸ்தான அதிகாரிகளிடம் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தங்கதுரை "நான் உடல்நிலை பாதிக்கப்பட்டு அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தேன். அப்போது உடல்நிலை சீரடைந்தால் சுவாமிக்கு காணிக்கை அளிப்பதாக வேண்டிக்கொண்டேன். அதன்படி  தற்போது ஏழுமலையானுக்கு 2 கைகளை தங்கத்தால் செய்து காணிக்கையாக வழங்கினேன். தற்போது தயார் செய்யப்பட்ட இந்த கைகளுக்காக 7 மாதங்களுக்கு முன்பு தேவஸ்தான அதிகாரிகளிடம் மூலவர் சன்னதியில் உள்ள சுவாமியின்  கைகள் அளவு பெறப்பட்டு தயார் செய்யப்பட்டது’’ என்றார்.