திருப்பதியில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. தேவஸ்தானம் விதித்த கடுமையான கட்டுப்பாடுகளால் பக்தர்கள் வருகை குறைவாக காணப்பட்டது. சிறப்பு யாக பூஜைகளுக்கு பின்னர் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த கும்பாபிஷேகத்தை பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கோவிந்தா கோவிந்தா என கோஷமிட்டனர்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வையொட்டி சேனாதிபதி உற்சவம், அங்குரார்ப்பணத்துடன் கும்பாபிஷேக பூஜைகள் நடத்தப்பட்டன. யாக சாலையின் மூலவர் மற்றும் கோயிலில் உள்ள இதர சன்னதிகளான வரதராஜ சுவாமி, யோகநரசிம்மர், ராமானுஜர், வகுலமாதா சன்னதியில் உள்ள மூலவர்களின் ஜீவ சக்திகள் கும்பத்திற்கு கொண்டு வரப்பட்டு யாகசாலையில் வைத்து பூஜைகள் நடத்தினர்.

பின்னர் மூலவர் சன்னதிக்கு மேல் உள்ள ஆனந்த நிலையம் மற்றும் இதர சன்னதிகளின் கோபுரங்களுக்கு மராமத்து பணிகள், தங்க கொடிமரம் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் இன்று கருவறைக்கு மேல் உள்ள ஆனந்த நிலையம், ராஜகோபுரம் மற்றும் இதர சன்னதிகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மீண்டும் வரும் 2030ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெறும் என்பதால் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர். 

மாலை உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசாமி பெரிய சேஷ வாகனத்திலும், பின்னர் உற்சவர் மலையப்பசாமி மட்டும் கருட வாகனத்திலும் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்கள்.