ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் திஹார் சிறையில் எண் 7-ல் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அதே சிறையில் முன்னாள் அமைச்சர் டி.கே.சிவகுமாரும் அடைக்கப்பட்டுள்ளார். 

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கைதான ப.சிதம்பரம் கடந்த 5-ம் தேதி திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். இவர் சிறை எண்.7-ல் 15-ம் அறையில் அடைக்கப்பட்டுள்ளார். கர்நாடகா காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவர் டி.கே.சிவகுமார். முன்னாள் அமைச்சரான இவர், கர்நாடகா காங்கிரசில் பலம் வாய்ந்த தலைவராக விளங்குகிறார். இவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். 


 
அவரை வரும் 1-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்கும்படி டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், உடல்நிலை பாதிக்கப்பட்டதால் மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். அவருக்கு உயர் ரத்த அழுத்தம், நெஞ்சுவலி, சர்க்கரை நோய் போன்றவை இருப்பதாக கூறி, அவற்றுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், சிவகுமாரின் ஜாமீன் மனு மீதான விசாரணை, டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அவருடைய உடல்நிலை சரியாகி விட்டதால், அவரை சிறையில் அடைக்கும்படி அமலாக்கப்பிரிவு கோரியது. இதைத் தொடர்ந்து, மருத்துவர்கள் அவரை பரிசோதனை செய்து பூரண குணமாகி விட்டதாக தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, அவர் திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். 

திஹார் சிறைச்சாலையில் 7-ஆம் எண் சிறையில் பொதுவாக, பொருளாதாரம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. நீதிமன்றக் காவலில் இருக்கும் அல்லது விசாரணையை எதிர்கொள்ளும் குற்றவாளிகள் இங்கு அடைக்கப்படுவது வழக்கம். அதன்படி, ப.சிதம்பரமும், டி.கே.சிவகுமாரும் சிறை எண்.7-ல் அடுத்தடுத்த அறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். ஆனால், இவர்கள் இருவரும் சந்தித்து பேசிக்கொள்வதற்கான வாய்ப்பு மிகமிகக் குறைவு என்று கூறப்படுகிறது. 

மேலும், பிரிட்டிஷ் தொழிலதிபர் மற்றும் அகஸ்டாவெஸ்ட்லேண்ட் இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேல், விமான ஊழலில் சிக்கியுள்ள தீபக் தல்வார், மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத்தின் மருமகன் உள்ளிட்டோர் சிறை எண். 7-ல் தான் அடைக்கப்பட்டுள்ளனர். ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு தொடர்பாக சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரமும் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டு இதே சிறையில் தான் அடைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், காங்கிரஸ் முக்கிய தலைவர்கள் திஹார் சிறை எண் 7-ல் குவிந்து வருகின்றனர் என விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.