threatend to wipro company

பெங்களூருவில் செயல்பட்டு வரும் விப்ரோ நிறுவனத்திடம் ரூ. 500 கோடி கேட்டு மிரட்டல் விடுத்து மின் அஞ்சல் ஒன்று வந்துள்ளது. பணம் கொடுக்காவிட்டால், பெங்களூருவில் உள்ள அனைத்து அலுவலங்களிலும் பயோ-ஆயுதம் மூலம் தாக்குதல் நடத்தப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த ரூ.500 கோடியும், இந்திய ரூபாயாக இல்லாமல், டிஜிட்டல் கரன்சியாக, பிட்காயின் வடிவில் அளிக்க வேண்டும் என அந்த மின்அஞ்சலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து போலீசார் கூறுகையில், “ பெங்களூருவில் செயல்படும் விப்ரோ சாப்ட்வேர் நிறுவனத்துக்கு நேற்று Ramesh2@protonmail.com என்ற முகவரியில் இருந்து மின்அஞ்சல் வந்துள்ளது. அந்த மெயிலில் வரும் 25-ந்தேதிக்குள் ரூ.500 கோடியை டிஜிட்டல் கரன்சியாக பிட்காயில் வடிவில் அளிக்க வேண்டும். இல்லாவிட்டால், பெங்களூருவில் செயல்பட்டு வரும் அனைத்து விப்ரோ நிறுவனங்கள் மீதும் பயோ-ஆயுதங்கள் மூலம் தாக்குதல் நடத்தப்படும் என மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

அந்த பயோ-ஆயுதங்கள் அனைத்தும் ஊழியர்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்கள் வடிவில் பரப்பிவிடப்படும். அந்த விஷப்பவுடரை ஊழியர்கள் சுவாசித்தாலோ, உரிந்தாலோ, எடுத்துக்கொண்டாலோ உடனடியாக மரணம் ஏற்படும். இதை ஊழியர்கள் சாப்பிடும் கேண்டீன் பொருட்கள், கழிப்பறை டிஷ்யு பேப்பர், குடிநீர், பயன்படுத்தும் தண்ணீர் என எந்தவிதத்திலும் அனுப்புவோம்.

அடுத்த சில நாட்களில் நாங்கள் பயன்படுத்தக்கூடிய மருந்துகளின் மாதிரிகளை விப்ரோ நிறுவனத்துக்கு அனுப்புவோம். அப்போது தெரிந்து கொள்ளுங்கள் இந்த மிரட்டல் பொய் அல்ல என்று. மேலும், கொல்கத்தாவில் சில நாட்களுக்கு முன் ஒரு கட்டிடத்தில் இரு நாய்கள் மர்மமாக இறந்துகிடந்தன. அந்த நாய்களுக்கு இந்த மருந்தை செலுத்தி சோதனை செய்ததில் அவைகள் இறந்தன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்த மிரட்டல் மெயில் குறித்து விப்ரோ நிறுவனத்திடம் கேள்வி எழுப்பியதுபோது பதில் அளிக்க நிர்வாகம் மறுத்துவிட்டது. இது குறித்து பெங்களூரு சிறப்பு குற்றவியல் பிரிவு போலீஸ் எஸ்.பி.எஸ்.ரவி தலைமையில் சிறப்பு படையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.