புவி வெப்பமயமாதலின் விளைவாக உலகம் முழுவதும் பருவநிலைகளில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டு வருகிறது. பல நாடுகளில் பெருமழையும், சில நாடுகளில் மழை பொய்த்தும் மக்களை இன்னலுக்கும்  உள்ளாக்கி வருகிறது. 

அண்மைக் காலமாக இந்தியாவின் சில பகுதிகளிலும் மழைக்காலங்களில் அளவுக்கதிகமான மழைப்பொழிவால் ஏற்படும் வெள்ளப்பெருக்கில் பல கோடி ஏக்கர் அளவிலான பயிர்கள் பாழாகிப் போகின்றன. அதேவேளையில், பல பகுதிகளில் எதிர்பார்த்த அளவில் பருவமழை பெய்வதில்லை. 

இதன் விளைவாக இங்கு வானம் பார்த்த பூமியாக கிடக்கும் பல கோடி ஏக்கர் அளவிலான விளைநிலங்கள் போதிய விளைச்சலை பெற முடியாமல் பயிர்கள் வாடியும் கருகியும் போகின்றன. 

கோடைக்காலத்தில் அடிக்கும் கடுமையான வெயிலால் நிலத்தடி நீராதாரமும் வற்றிப்போவதால் போதிய குடிநீர் கிடைக்காமல் மக்கள் தாகத்தால் பரிதவிக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது. 

இதனால் மண் வளத்தையும் வானத்தில் இருந்து கிடைக்கும் மழை வளத்தையும் மட்டுமே நம்பி வாழும் நம் நாட்டின் கோடிக்கணக்கான விவசாயிகள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். 

பயிர் செய்வதற்காக வங்கிகளில் வாங்கிய கடன்களையும், அறுவடைக்காலம் வரை குடும்பத்தை பராமரிக்க வாங்கிய இதர வெளிக்கடன்களையும் செலுத்த முடியாமல் கடன் நெருக்கடிக்கும் உள்ளாகின்றனர். 

இவர்களில் பலர் கடன்காரர்களின் தொல்லையை சமாளிக்க முடியாமலும் தொடர்ந்து குடும்பத்தை நல்ல முறையில் நிர்வகிக்க இயலாத விரக்தியிலும் மனமொடிந்து தற்கொலை செய்து கொள்வது நமது நாட்டில் தொடர்கதையாகவும் தீராத துயரமாகவும் இருந்து வருகிறது. 

இந்நிலையில், வேதனையில் வாடும் நம் நாட்டின் விவசாயிகளுக்கு நம்பிக்கையூட்டும் விதமாக ‘இந்த ஆண்டில் பருவமழை நன்றாகவும், பரவலாகவும் இருக்கும்' என்னும் மகிழ்ச்சியான தகவலை இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று தெரிவித்துள்ளது.