thirupati rs 300 darshan ticket sold out by making xerox copy
டிசம்பர் மாத கடைசி என்பதாலும், பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை விடப் பட்டதாலும், திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. நேற்று முன் தினம் ஞாயிறு மட்டும் பக்தர்கள் பெருமளவில் குவிந்தனர். இதனால், கடந்த மூன்று நாட்களாக திருப்பதியில் குவிந்த கூட்டத்தை சரியான வகையில் கையாளத் தெரியாமல் தேவஸ்தான நிர்வாகம் திணறியது.
சனி, ஞாயிறு, திங்கள் என தொடர்ந்து மூன்று நாட்களாக பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. அதனால், ஞாயிறும், திங்கள் கிழமை நேற்றும் தர்ம தரிசனத்தில் பக்தர்கள் 24 மணி நேரத்திற்கும் மேலாகக் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. வைகுண்டம் காத்திருப்பு அறையில் உள்ள 32 அறைகளிலும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. காத்திருப்பு அறைகளுக்கு வெளியிலும் ஏராளமான பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர்.
இதனிடையே, சூழ்நிலையைப் பயன்படுத்தி, திருமலையில் விரைவு தரிசன டிக்கெட் ஸ்கேன் செய்யும் கவுன்டரில் பணிபுரியும் இருவர் உதவியுடன் மோசடி செய்துள்ளார் ஒருவர். 300 ரூபாய் விரைவு தரிசன டிக்கெட் வாங்கித் தருவதாகக் கூறி, பழைய டிக்கெட்டை கலர் ஜெராக்ஸ் எடுத்து, பக்தர்களுக்கு கூடுதல் விலைக்கு விற்றுள்ளார். அவ்வாறு விற்ற இடைத் தரகர் வாசு என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர். இந்த மோசடியில் தொடர்புடைய ஊழியர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
