திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் 40 எம்எல்ஏக்கள் தன்னுடன் தொடர்பில் இருப்பதாகப் பேசிய பிரதமர் மோடியை திரிணாமூல காங்கிரஸ் கட்சி மிகக் கடுமையாக விமர்சித்துள்ளது.
நாடாளுமன்றத்துக்கு 4 கட்டத் தேர்தல் நிறைவடைந்துவிட்டன. இன்னும் 3 கட்ட  தேர்தல்கள் எஞ்சியுள்ளன. இந்தத் தொகுதிகளில் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. மேற்கு வங்க மாநிலம் செராம்பூரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்று பிரதமர் மோடி பேசினார். அப்போது அவர், “மே 23-ம் தேதி தேர்தல் முடிவு வரும்போது தாமரை எல்லா இடங்களிலும் மலரும். உங்கள் எம்எல்ஏக்கள் உங்களை விட்டு விலகி விடுவார்கள். திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 40 எம்எல்ஏக்கள் இன்றுவரை எங்களுடன் தொடர்பில் உள்ளனர்” என மோடி கூறினார்.
பிரதமராக இருக்கும் ஒருவரே குதிரைப் பேரத்தை ஊக்குவித்தும் கட்சித் தாவலை ஆதரித்தும் பேசியிருப்பது தேசிய அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. தெரீக் ஓ பிரையன் பிரதமர் மோடியை காட்டமாக விமர்சித்து பேட்டி அளித்திருக்கிறார்.

 
 “காலாவதியான பிரதமரே...  உங்களுடன் ஒருவரும் சேரப்போவதில்லை. ஒரு கவுன்சிலர்கூட உங்களுடன் வரமாட்டார்.  நீங்கள் (மோடி) தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறீர்களா அல்லது குதிரை பேரத்தை நடத்துகிறீர்களா? நீங்கள் காலாவதியாகும் நாள் நெருங்கி விட்டது. குதிரை பேரம் நடத்தும் உங்கள் மீது தேர்தல் ஆணையத்தில் இன்று நாங்கள் புகார் அளிக்க உள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.