மியூசியத்தில் இருந்து  திருடப்பட்ட தங்க டிபன் பாக்சில் திருடர்கள் உணவருந்திய சம்பவம் தெலங்கானாவில் நடந்துள்ளது.

நிஜாம் ஆட்சிக் காலத்தின்போது, பயன்படுத்தப்பட்ட விலை உயர்ந்த பொருட்கள் ஐதராபாத்தில் உள்ள நிஜாம் மியூசியத்தில் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன.  மியூசியத்தில் தங்கத்தால் தயாரான படங்கள் பொருட்கள் ஏராளமான அளவில் உள்ளன. 

மியூசியத்தில் ஏராளமான பொருட்கள் இருந்தபோதிலும், 400 பொருட்களை பார்ப்பதற்கு மட்டுமே பொதுமக்களுக்கு அனுமதி உண்டு. இந்த நிலையில் மியூசியத்துக்கு நுழைந்த மர்ம நபர்கள், அங்கிருந்த நவரத்தின கற்கள் பதிக்கப்பட்ட மூன்றடுக்க தங்க டிபன் கேரியர், நவரத்தின கற்கள் பதிக்கப்பட்ட தங்கத்திலான கப் அன்ட் சாசர், தங்க ஸ்பூன் உள்ளிட்டவற்றை திருடிச் சென்றுள்ளனர்.

இது குறித்து சிறப்பு புலனாய்வு குழு அமைச்சப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. தெலங்கானா மாநிலம், ரெங்கா ரெட்டி மாவட்டத்தை சேர்ந்த முபீம், கவுஸ் பாஷா ஆகியோர் திருடிச் சென்றது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்கள் திருடிச் சென்ற தங்க டிபன் கேரியர், தங்க ஸ்பூன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

 தங்க டிபன் கேரியரை திருடிச் சென்ற அவர்கள், அதில் உணவு சாப்பிட்டதும் விசாரணையில் தெரியவந்தது. 

இது குறித்து போலீஸ் அதிகாரி கூறுகையில், 2 கிலோ எடையுடைய இந்த தங்க டிபன் கேரியரின் சந்தை மதிப்பு சுமார் ஒரு கோடி ரூபாய் என்றும் பழமையான பொருள் என்பதால் சர்வதேச சந்தையில் ரூ.30 முதல் 40 கோடி வரைவிலை போகலாம் என்று கூறினார்.