‘அவர்கள் எங்களை உயிருடன் எரிக்க முயன்றனர்’: ஹல்த்வானி வன்முறை குறித்து பெண் போலீஸ் பகீர்!
ஹல்த்வானி வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண் போலீஸ் அதிகாரி ஒருவர், வன்முறை கும்பல் தங்களை உயிருடன் எரிக்க முயன்றதாக கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலம் நைனிட்டால் மாவட்டம் ஹல்த்வானி பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். அப்போது, சட்டவிரோதமாக கட்டப்பட்டிருந்த மதரஸாவை அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டதாக தெரிகிறது. அதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அப்போது, போலீஸாருக்கும், உள்ளூர் மக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஆக்கிரமிப்பை அகற்ற வந்த அதிகாரிகள் மீது கற்களை வீசியும், காவல் நிலையத்தை முற்றுகையிட்டும் தாக்குதல் நடத்தப்பட்டது. வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. இதனால், அந்த பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இணையம் துண்டிக்கப்பட்டுள்ளது, பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன. இந்த வன்முறை சம்பவத்தால் அம்மாநிலம் முழுவதும் பதற்றம் நிலவுகிறது.
இந்த நிலையில், ஹல்த்வானி வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண் போலீஸ் அதிகாரி ஒருவர், வன்முறை கும்பல் தங்களை உயிருடன் எரிக்க முயன்றதாக கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
“அவர்கள் எங்களை உயிருடன் எரிக்க முயன்றனர்.” என பெண் போலீஸ் அதிகாரி ஒருவர் மருத்துவமனையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது தெரிவித்துள்ளார். “கல் வீச்சில் இருந்து எங்களை காப்பாற்றிக் கொள்வதற்காக நாங்கள் ஒரு வீட்டில் பதுங்கியிருந்தோம். பின்னர் சுமார் 15 பேர் வீட்டிற்குள் நுழைந்து, எங்களைத் தாக்கினர், தொடர்ந்து வீட்டிற்கு அக்கும்பல் தீ வைக்க முயன்றனர்.” என அந்த பெண் போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அந்த பெண் போலீஸ் அதிகாரி, “அங்கிருந்து எங்களால் தப்பிக்க முடியவில்லை எல்லா திசைகளிலிருந்தும் கற்கள் வீசப்பட்டன. எங்களைக் காப்பாற்றியவர் தாக்கப்பட்டார். அவரது வீடு சேதமடைந்தது. இறுதியில் தீயணைப்பு படையினர் வந்து மீட்பு பணியின்போது எங்களை காப்பாற்றினர். ஆனால் மீட்புப் பணியின்போதும் எங்கள் மீது கண்ணாடித் துண்டுகள் வீசப்பட்டன.” என்றார்.
ஹல்த்வானி வன்முறையை கட்டுப்படுத்த நான்கு கம்பெனி துணை ராணுவப் படைகளை ஹல்த்வானிக்கு விரைவாக அனுப்பப்பட்டன. கண்டவுடன் சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. உத்தரகாண்ட் மாநிலம் ஹல்த்வானி வன்முறையை அடுத்து மாநிலம் முழுவதும் உஷார்படுத்தப்பட்டுள்ளது. பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டன. இணைய சேவைகள் நிறுத்தப்பட்டன.
உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, ஹல்த்வானியில் அதிகரித்து வரும் பிரச்சினைக்கு தீர்வு காண உயர்மட்டக் கூட்டத்தை கூட்டி ஆலோசித்தார். வன்முறையைத் தூண்டுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
முன்னதாக, ஹல்த்வானியில் பல்வேறு இடங்களில் ஆக்கிரமிப்புக்கு எதிராக உயர் நீதிமன்றத்தின் உத்தரவையடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டதாக நைனிட்டால் மாவட்ட ஆட்சியர் வந்தனா சிங் தெரிவித்துள்ளார். ஆக்கிரமிப்பு செய்யப்பட்டவை, இரண்டு கட்டமைப்புகளைக் கொண்ட ஒரு வெற்றுச் சொத்து, இது மதக் கட்டமைப்பாகப் பதிவு செய்யப்படவில்லை. அதற்கான அங்கீகாரம் வழங்கப்படவில்லை. சிலர் இந்த அமைப்பை மதரஸா என்று அழைக்கின்றனர் எனவும் அவர் கூறினார்.
உத்தரகாண்ட் வன்முறையை வகுப்புவாதமாக்க வேண்டாம்: நைனிட்டால் மாவட்ட ஆட்சியர்!
ஆக்கிரமிப்புகளை இடிக்க எந்த தடையும் இல்லை என்பதால், அதனை தொடர முடிவு செய்துள்ளதாக தெரிவித்த வந்தனா சிங், இந்த சம்பவம் வகுப்புவாதமானது அல்ல. இதை வகுப்புவாதமாகவோ, உணர்ச்சிகரமானதாகவோ ஆக்க வேண்டாம் என்று அனைவரையும் கேட்டுக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.