உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் நோய் தற்போது இந்தியாவிலும் தனது கோர முகத்தை காட்டி வருகிறது. இதுவரையில் இந்தியாவில் 3,082 பேர் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் பலியானோர் எண்ணிக்கை 86 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் அதிகபட்சமாக மஹாராஷ்டிராவில் பாதிப்பு எண்ணிக்கை 500 ஐ கடந்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக தமிழகத்தில் 485 பேர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர். கடந்த 4 நாட்களில் மட்டும் தமிழ் நாட்டில் 300 க்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகி இருக்கிறது. இந்த எண்ணிக்கை மேலும் உயரும் அபாயம் உள்ளது. 

இந்தநிலையில் தமிழ்நாட்டில் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அண்டை மாநிலமான கேரளா, தமிழக எல்லைகளை மூடி, இணைப்பை துண்டித்து விட்டதாக செய்தி பரவியது. ஆனால் அதை அதிரடியாக மறுத்திருக்கும் கேரள முதல்வர் பினராயி விஜயன், அது போலியான செய்தி என்றும் தமிழகம் தங்கள் சகோதர மாநிலம் என கூறினார். அதற்கு மகிழ்ச்சி தெரிவித்த தமிழக முதல்வர் பழனிசாமி,
'கேரள மாநிலம், தமிழக மக்களை சகோதர சகோதரிகளாக அன்பு பாராட்டுவதில் மகிழ்ச்சியடைகிறேன். அனைத்து இன்ப துன்பங்களிலும் கேரள மாநில சகோதர சகோதரிகளின் உற்ற துணையாக தமிழகம் இருக்கும் என அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்' என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் பேசிய காணொளியை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து பதிவிட்டிருந்தார்.

 

அதனை தனது ட்விட்டர் கணக்கில் ரீ ட்விட் செய்திருக்கும் கேரள முதல்வர் பினராயி விஜயன், 'கேரளா மற்றும் தமிழ்நாட்டிற்கு இடையேயான பரஸ்பர உறவானது கலாச்சாரம், சகோதரத்துவம் மற்றும் மொழி முதலியவற்றால் பின்னிப் பிணைந்தது ஆகும். இந்த ஆழமான பந்தத்தை புரிந்து கொள்ள இயலாதவர்கள் தான் பொய்யான தகவல்களை பரப்புகின்றனர். நாம் ஒருங்கிணைந்து இந்த சவால்களை முறியடிப்போம்' என பதிவிட்டிருக்கிறார்.