மக்களவைத் தேர்தல் 2024: பாஜகவுக்கு சவால் நிறைந்த மாநிலங்கள்!
மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு காங்கிரஸ் கட்சியை தவிர வேறு சில சவால் நிறைந்த மாநிலங்களும் உள்ளன
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான அறிவிப்பு வருகிற 15ஆம் தேதி வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் செய்து வருவதற்கிடையே, அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு படுதீவிரமாக தயாராகி வருகின்றன. எதிர்வரவுள்ள தேர்தலில் மூன்றாவது முறையாக வெற்றி பெற்று ஆட்சியமைக்க பாஜக முனைப்பு காட்டி வருகிறது. அதேசமயம், பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் இந்தியா கூட்டணி என்ற பெயரில் ஓரணியில் திரண்டுள்ளன.
பாஜகவை பொறுத்தவரை வட மாநிலங்கள் அக்கட்சிக்கு சாதகமாக இருந்தாலும், தென் மாநிலங்களும், மேற்குவங்கமும் அக்கட்சிக்கு எப்போதும் சவால் நிறைந்து காணப்படும். கடந்த கால தேர்தல் வரலாறுகளிம் அதனையே எடுத்துரைக்கின்றன. அந்த வரலாறு இந்த முறையும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில், காங்கிரஸ் கட்சியை தவிர பாஜகவுக்கு சவால் நிறைந்த மாநிலங்கள் எவை என்பது குறித்து இங்கு தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு
பாஜகவுக்கு சவால் நிறைந்த மாநிலங்களில் முன்னணியில் இருப்பது தமிழ்நாடு. தமிழ்நாட்டின் அரசியல் நிலப்பரப்பில் திராவிட சித்தாந்தம் ஆதிக்கம் செலுத்துகிறது. சமூக நீதி கொள்கைகளுக்கும் தமிழ்நாடு பெயர் பெற்றது. தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி உள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு தேர்தலில் திமுக கூட்டணி மொத்தமுள்ள 39 தொகுதிகளில் 38 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஒரு தொகுதியில் அதிமுக வெற்றி பெற்றது. புதுச்சேரியில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. திமுக கூட்டணி 53.15 சதவீத வாக்குகளையும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 30.57 சதவீத வாக்குகளையும் பெற்றது.
ஜவஹர்லால் நேரு முதல் நரேந்திர மோடி வரை: இந்தியாவில் நீண்ட காலம் பிரதமராக பதவி வகித்தவர்கள்!
அந்த தேர்தலில் திமுக மட்டும் 33.52 சதவீத வாக்குகளை பெற்றிருந்தது. காங்கிரஸ் கட்சி 12.61 சதவீத வாக்குகளை பெற்றிருந்தது. ஆனால், தேசிய ஜனநாயகக் கூட்டணி பெற்ற 30.57 சதவீத வாக்குகளில் அதிமுக கட்சி மட்டும் பெற்றது 19.39 சதவீத வாக்குகள். பாமக 5.36 சதவீதம், தேமுதிக 2.16 சதவீத வாக்குகளையும் பெற்றது. பாஜகவுக்கு 3.66 சதவீத வாக்குகள் மட்டுமே கிடைத்தது. தற்போது, பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியுள்ளது. பாமக, தேமுதிக ஆகிய கட்சிகளும் அதிமுக கூட்டணியில் உள்ளன.
கேரளா
இடதுசாரிகள் ஆதிக்கம் செலுத்தும் மாநிலம் கேரளா. சமத்துவக் கொள்கைகள் மற்றும் விரிவான சமூக நலனில் கவனம் செலுத்தி, இடதுசாரிக் கட்சிகளின் ஆளுகையால் கேரளா தனித்துவமாக விளங்குகிறது. காங்கிரஸ் கட்சியும் இங்கு செல்வாக்கு பெற்றுள்ளது. இடதுசாரிகள், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் மாறிமாறி கேரளாவில் ஆதிக்கம் செலுத்துகின்றன.
கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி 47.48 சதவீத வாக்குகளையும், இடசாரிகள் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி 36.29 சதவீத வாக்குகளையும் பெற்றது, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 15.64 சதவீத வாக்குகளை பெற்றது. ராகுல் காந்தி வெற்றி பெற்ற வயநாடு தொகுதி கேரளாவில் உள்ளது. தேசிய அளவில் இடதுசாரிகளும், காங்கிரஸும் இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ளன.
மேற்குவங்கம்
பாஜகவுக்கு அதிகளவு குடைச்சல் கொடுக்கும் மாநிலம் மேற்குவங்கம். தடாலடியான நடவடிக்கைகளில் இறங்குபவர் அம்மாநிலத்தில் ஆதிக்கம் செலுத்தும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி. ஒருகாலத்தில் இடதுசாரிகளின் கோட்டையாக இருந்த மேற்குவங்கம் இப்போது திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் ஆதிக்கம் நிறைந்ததாக இருக்கிறது.
பாஜகவில் சேரும் பத்மஜா என் தங்கை அல்ல: முரளீதரன் அதிருப்தி!
கடந்த மக்களவை தேர்தலில், இம்மாநிலத்தின் மீது பாஜக தனியாக கவனம் செலுத்தியது. அது அக்கட்சிக்கு கைகொடுத்தது என்றாலும், திரிணாமூல் காங்கிரஸை வீழ்த்த முடியவில்லை. அந்த தேர்தலில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் கட்சி 43.69 சதவீத வாக்குகளை பெற்றது. பாஜக 40.64 சதவீத வாக்குகளை பெற்றது. காங்கிரஸ் 5.67 சதவீதம், இடதுசாரிகள் 6.34 சதவீத வாக்குகளை பெற்றனர். இப்போது, இந்தியா கூட்டணியில், திரிணாமூல், காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளனர். ஆனால், மேற்குவங்க மாநிலத்தில் தனித்து போட்டி என மம்தா அறிவித்துள்ளார். இருப்பினும், இந்தியா கூட்டணியில் தொடர்வதாகவே அவர் தெரிவித்துள்ளார்.
ஆந்திரா, தெலங்கானா
பாஜகவுக்கு சவால் நிறைந்த தென் மாநிலங்களில் ஒன்று ஆந்திரா. ஒன்றுபட்ட ஆந்திர மாநிலத்தில் இருந்து இரண்டாக பிரிந்து ஆந்திரா, தெலங்கானா என இரண்டு மாநிலங்களாக இருந்தாலும், இரண்டு மாநிலங்களிலுமே பிராந்திய கட்சிகளே ஆதிக்கம் நிறைந்தவையாக உள்ளன. ஆந்திராவில், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகளும், தெலங்கானாவில் பாரத் ராஷ்ட்ரிய சமிதி கட்சியும் செல்வாக்காக உள்ளன. ஆனால், கடந்த சட்டமன்றத் தேர்தலில் தெலங்கானாவில் முதல் முறையாக காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்துள்ளது.
எனவே, எதிர்வரவுள்ள மக்களவைத் தேர்தலிலும் தெலங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் ஆதிக்கம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆந்திராவை பொறுத்தவரை ஜெகன் மோகன் தலைமையிலான எஸ்.ஆர். காங்கிரஸ், சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் ஆகிய இரு கட்சிகளுமே பாஜகவுடன் இணக்கமாக உள்ள கட்சிகள். எனவே, அவற்றில் ஒன்றுடன் பாஜக கூட்டணியை உறுதி செய்ய வேண்டிய நிலையில் அக்கட்சி உள்ளது. ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், தெலுங்கு தேசம் ஆகிய இரண்டு கட்சிகளும் இந்தியா கூட்டணியிலும் இல்லை.
கடந்த 2019 தேர்தலில் ஆந்திர மாநிலத்தில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் 49.89 சதவீத வாக்குகளையும், தெலுங்கு தேசம் 40.19 சதவீத வாக்குகளையும் பெற்றது. பாஜக 0.98 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றது. காங்கிரஸ் 1.31 சதவீத வாக்குகளை பெற்றது. தற்போது ஆந்திரா மாநில காங்கிரஸ் தலைவராக ஜெகன் மோகனின் சகோதரி ஒய்.எஸ்.ஷர்மிளாவை காங்கிரஸ் கட்சி களம் இறக்கியுள்ளது. அவரது வருகை அக்கட்சிக்கு எப்படி உதவி புரிய போகிறது என்பதை தேர்தல் முடிவுகள் சொல்லும்.
அதேபோல், தெலங்கானா மாநிலத்தில் சந்திரசேகர ராவின் பி.ஆர்.எஸ். கட்சி 41.29 சதவீத வாக்குகளை பெற்றது, காங்கிரஸ் 29.48 சதவீத வாக்குகளையும், பாஜக 19.45 சதவீத வாக்குகளையும் பெற்றது. இப்போது, அங்கு ஆளும் காங்கிரஸ் வலிமையாக உள்ளது. அதன் வாக்கு வங்கியும் உயர்ந்துள்ளது என்பது கவனிக்கத்தக்கது.
கர்நாடகா
தென் மாநிலமான கர்நாடகா, தேசிய கட்சிகளான பாஜக, காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் மாறிமாறி அடைக்கலம் கொடுக்கும் மாநிலம். மதசார்பற்ற ஜனதாதளமும் இங்கு கணிசமான வாக்கு வங்கியை கொண்டுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு தேர்தலில் பாஜக 51.75 சதவீத வாக்குகளை பெற்றிருந்தது. காங்கிரஸ் 32.11 சதவீதம், மதசார்பற்ற ஜனதாதளம் 9.74 சதவீத வாக்குகளை பெற்றிருந்தது. ஆனால், கடந்த சட்டமன்றத் தேர்தலில் அம்மாநிலத்தில் வெற்றி பெற்று ஆளுங்கட்சியாக காங்கிரஸ் உள்ளது.
பீகார்
சமூக நீதி, சமத்துவத்தில் கவனம் செலுத்தும் கட்சியாக பீகார் மாநிலத்தில் லாலு பிரசாத் தலைமையிலான ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி வலுவாக உள்ளது. இங்கு மற்றொரு பிராந்திய கட்சியான நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம் கட்சியும் செல்வாக்கு நிறைந்தது. ஆனால், பாஜக, மகாகத்பந்தன் (காங்கிரஸ், ஆர்.ஜே.டி, இடதுசாரிகள்) கூட்டணியில் மாறிமாறி நிதிஷ்குமார் பயணித்து பலனடைந்து வருகிறார்.
மக்களவை தேர்தல் 2024: விரலில் வைக்கப்படும் அழியாத மை எங்கு தயாராகிறது?
கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக 23.58 சதவீத வாக்குகளையும், ஆர்.ஜே.டி 21.81 சதவீத வாக்குகளையும் பெற்றது. அதேசமயம், ஆர்.ஜே.டி. 15.36 சதவீதம், காங்கிரஸ் 7.70 சதவீத வாக்குகளை பெற்றது. ஆனால், அதற்கு அடுத்த 2020ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வாக்கு சதவிகிதம் 37.26 சதவீதமாகவும், மகாகத்பந்தன் கூட்டணியின் வாக்கு சதவிகிதம் 37.23 சதவீதமாகவும் உள்ளது. இது மிகவும் சொற்பமான வித்தியாசமே. மேலும், பீகார் மாநிலத்தில் அரங்கேறும் அரசியல் காட்சிகள், வளர்ந்து வரும் ஆர்.ஜே.டிக்கு சாதகமான சூழல் ஆகியவை எதிர்வரவுள்ள மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு (மகாகத்பந்தன் கூட்டணி) சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.