புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவம் இன்று தாக்குதல் நடத்தியுள்ள நிலையில் அதனை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் மறுத்துள்ளார்.

எல்லையில் இருந்த ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் 3 முக்கிய முகாம்களை இந்திய விமானப்படை வீரர்கள் இன்று அதிகாலை 3:30 மணி அளவில் 1,000 கிலோ அளவிலான குண்டுகளை வீசி அழித்துள்ளனர். 12 மிராஜ் 2000 ரக விமானங்கள் மூலம் பாலாகோட், சாக்கோதி, முஸாஃபராபாத் ஆகிய இடங்களில் இருந்து முகாம்களை விமானப்படை குறி வைத்து தகர்த்துள்ளது.

 

இந்த தாக்குதலில் 200 க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் உயிரிழந்ததாக தகவல் வெளியானது. தாக்குதலை உறுதி செய்யும் வகையில் இந்திய விமானப்படை தாக்குதலில் உருகுலைந்த பயங்கரவாதிகள் முகாம்களின் புகைப்படங்களும் வெளியாகின. இதுகுறித்து ஆலோசனை நடத்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் தலைமையிலான தேசிய பாதுகாப்பு குழு கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில் பாகிஸ்தான் பகுதியில் தாக்குதல் நடத்தியதாக இந்தியா சொல்வது பொய் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்து அவர் கூறுகையில், ’’எல்லையில் இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியதாக கூறப்படுவதை ஏற்க முடியாது. இந்தியா தாக்குதல் நடத்தியதாக சொல்லும் இடங்கள் பத்திரிக்கையாளர்களுக்கு காட்டப்படும். இந்திய அரசு பொறுப்பற்ற மற்றும் கற்பனையான விஷயங்களை கூறிவருகிறது. அமைதி, ஸ்திரத்தன்மை பாதிக்கப்படக்கூடிய வகையில் தேர்தல் சூழலில் இந்தியா நடவடிக்கை எடுத்துள்ளது. அனைத்து நிகழ்வுகளுக்கும் தயாராக இருக்க வேண்டும் என ராணுவம், மக்களுக்கு  அறிவுறுத்தப்பட்டுள்ளது’’ என அவர் தெரிவித்துள்ளார்.