Asianet News TamilAsianet News Tamil

சுரங்கத்திற்குள் இன்னும் 25 நாளுக்கு சாப்பாடு இருக்கு: மீட்கப்பட்ட தொழிலாளர் தகவல்

மீட்புப் பணியாளர்கள் நாள் முழுவதும் தேவையான உணவு அனுப்பினர் என்றும் இன்னும்கூட சுரங்கப்பாதையில் இன்னும் 25 நாட்களுக்குப் போதுமான உணவு இருக்கிறது என்றும் தொழிலாளி அகிலேஷ் தெரிவிக்கிறார்.

There is Food For 25 Days Still Inside The Tunnel says Rescued Worker sgb
Author
First Published Nov 29, 2023, 4:40 PM IST | Last Updated Nov 29, 2023, 4:55 PM IST

உத்தராகண்ட் மாநிலத்தில் சில்க்யாரா சுரங்கப்பாதையில் 17 நாட்களாக சிக்கியிருந்த 41 தொழிலாளர்கள் செவ்வாய்க்கிழமை மாலை வெளியே மீட்கப்பட்டனர். பிரத்யேகமாக சக்கரங்கள் பொருத்தப்பட்ட ஸ்ட்ரெச்சர்களில் 57 மீட்டர் இரும்புக் குழாய் வழியாக அவர்கள் வெளியே வந்தனர்.

மீட்கப்பட்டவர்களுக்கு முதல்வர் புஷ்கர் சிங் தாமி, மத்திய அமைச்சர் வி.கே. சிங்க ஆகியோர் மாலை அணிவித்து வரவேற்றனர். இந்நிலையில் சுரங்க இடிபாடுகளுக்கு நடுவே 17 நாள்  இருந்த அனுபவத்தை தொழிலாளி ஒருவர் விவரித்துள்ளார். தான் வீட்டிற்கு செல்லும் நேரத்தில் சுரங்கப்பாதை திடீரென இடிந்து விழுந்ததாக அவர் கூறுகிறார்.

"என் கண்முன்னால் சுரங்கப்பாதை இடிந்து விழுந்தது. ஒரு பெரிய சத்தம் கேட்டது. என் காதுகள் மரத்துப் போயின" என்று சுரங்கப்பாதையில் சிக்கியிருந்த அகிலேஷ் சிங் செய்தி சேனல் ஒன்றுக்குப் பேட்டி அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

“18 மணி நேரமாக எங்களுக்கு வெளியுலகத் தொடர்பு இல்லை. எங்களுக்கு அளிக்கப்பட்ட பயிற்சியின்படி, நாங்கள் சிக்கிய உடனேயே உள்ளே இருந்த தண்ணீர்க் குழாயைத் திறந்து, ஆட்கள் சிக்கியிருப்பதை வெளியில் இருந்தவர்களுக்குத் தெரிவித்தோம். அதை உணர்ந்து எங்களுக்கு ஆக்ஸிஜனை அனுப்பத் தொடங்கினர்" என்றும் அவர் கூறியுள்ளார்.

மீட்புப் பணியாளர்கள் எஃகுக் குழாயை இடிபாடுகளுக்குள் செருகி, நாள் முழுவதும் தேவையான உணவு அனுப்பினர் என்றும் இன்னும்கூட சுரங்கப்பாதையில் இன்னும் 25 நாட்களுக்குப் போதுமான உணவு இருக்கிறது என்றும் தொழிலாளி அகிலேஷ் தெரிவிக்கிறார். வீட்டிற்குச் சென்றதும் குறைந்தது 1-2 மாதங்கள் ஓய்வெடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறுகிறார்.

"உடல்நலப் பரிசோதனைகள் முடிந்த பிறகு நான் வீட்டிற்குச் செல்ல திட்டமிட்டுள்ளேன். அடுத்து என்ன செய்வது என்று முடிவு செய்வதற்கு முன் 1-2 மாதங்கள் ஓய்வு எடுப்பேன்" என்கிறார்.

உத்தர்காசியில் இருந்து சுமார் 30 கி.மீ தொலைவில் அமைந்துள்ள சில்க்யாரா சுரங்கப்பாதை மத்திய அரசின் சார் தாம் சாலை திட்டத்தின் ஒரு பகுதியாகும். நவம்பர் 12 அன்று சுரங்கப்பாதையின் ஒரு நுழைவாயிலில் இருந்து சுமார் 200 மீட்டர் தூரம் உள்ள பகுதி இடிந்து விழுந்தது. அதில் உள்ளே வேலை செய்யும் தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர்.

இந்த சம்பவத்திற்குப் பிறகு சுரங்கப்பாதையின் பாதுகாப்பு தணிக்கையை மத்திய அரசு தொடங்கியுள்ளது. இந்நிலையில், இந்த விபத்துக்கு யாரையும் குற்றம் சொல்ல முடியாது என்று தொழிலாளி  அகிலேஷ் சிங் கூறுகிறார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios