உலகின் பணக்கார கடவுளாக அறியப்படுபவர் திருப்பதி ஏழுமலையான். இவரை தரிசிப்பதற்காக இந்தியா முழுவதிலும் இருந்து தினமும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் திருப்பதிக்கு வருகை தருகிறார்கள். இதனால் திருப்பதியில் எப்போதும் கூட்டம் அதிகமாக இருக்கும். அதிலும் திருவிழா காலங்களில் கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம் இருக்கும். அதன்காரணமாக சுவாமி தரிசனம் செய்ய பலமணி நேரம் ஆகும்.

திருப்பதி நோக்கி வரும் கூட்டத்தை கட்டுப்படுத்தும் விதமாக சென்னை உள்பட நாடு முழுவதும் பல இடங்களில் தேவஸ்தானம் சார்பாக ஏழுமலையான் கோவில் கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில் திருப்பதியில் நடைமுறையில் இருந்த எல்1,எல்2, எல்3 சிறப்பு தரிசனத்தில் 500 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது. இது தொடர்பாக ஆந்திர உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதை அடுத்து இந்த விஐபி பிரேக் கட்டண முறை ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து தான் விஐபி டிக்கெட் விலையை 20000 ரூபாயாக உயர்த்த தேவஸ்தானம் சார்பாக முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த தரிசன முறையில் ஏழுமலையான் சன்னதி அருகே இருக்கும் குலசேகர ஆழ்வார்படி வரையிலும் பக்தர்களை 
அனுமதிக்க ஆலோசனை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

தினமும் 200 முதல் 300 பேர் வரை இந்த கட்டண முறையில் தரிசனத்திற்கு வருவார்கள் என்றும் எதிர்பார்க்க படுகிறது. பல்வேறு இடங்களில் கட்டப்பட இருக்கும் ஏழுமலையான் கோவில்களுக்கு நிதி திரட்டும் நடவடிக்கையாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  

ஆனால் தேவஸ்தான அதிகாரி ஒருவர் அத்தகைய திட்டம் எதுவும் தற்போது இல்லை எனவும், விரைவில் நிர்வாகம் சார்பாக அதுகுறித்து அறிக்கை வெளியிடப்படும் என்றார்.