There is a big thrust in the news of social media that 15 state banks are closed and linked to 5 big state banks.

15 அரசு வங்கிகள் மூடப்பட்டு, 5 பெரிய அரசு வங்கிகளுடன் இணைக்கப்பட உள்ளன என்று சமூக ஊடகங்களில் வரும் செய்தியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

இந்த 15 வங்கிகளில் மக்கள் செய்துள்ள டெபாசிட்களுக்கு பாதுகாப்பு இருக்காது என்ற அதில் கூறப்பட்டுள்ளதால், மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது.

இணைப்பு

பாரத ஸ்டேட் வங்கி யின், ஐந்து துணை வங்கிகள், சில மாதங்களுக்கு முன் பாரத ஸ்டேட் வங்கியுடன் இணைக்கப்பட்டன. இந்நிலையில், நாட்டில் உள்ள, 15 பொதுத்துறை வங்கிகள், விரைவில் ஐந்து பெரிய வங்கிகளுடன் இணைக்கப்பட உள்ளதாக தகவல் பரவி வருகிறது.

மக்கள் கலக்கம்

இந்த 15 வங்கிகளில் ஏதேனும் கணக்குகள், டெபாசிட்கள் வைத்து இருந்தால், உடனடியாக எடுக்கவும் என்று உலாவரும் செய்தியால், மக்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

வாய்ப்பு இல்லை

உண்மையில் இவ்வாறு சிறியவங்கிகள், பெரிய வங்கிகளோடு இணைக்கப்பட்டாலும்,கூட சிறிய வங்கிகளில் கணக்கு வைத்துள்ளவர்களின் டெபாசிட்கள், சேமிப்புகள் பெரிய வங்கிக்கு முறைப்படி மாற்றப்படும். இதில் வாடிக்கையாளர்கள் ஏமாற்றம் அடைவதற்கு வாய்ப்பு இல்லை.

இப்படி நடக்குமா?

வங்கிகள் பின்வருமாறு இணைக்கப்பட உள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. அதன்படி, அலகாபாத் வங்கி, கார்பரேஷன் வங்கி, இந்தியன் வங்கி, ஓரியன்டல் வங்கி ஆகியவை பஞ்சாப் நேஷனல் வங்கியோடு இணைக்கப்பட உள்ளது. 

1. இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, யு.சி.ஓ. வங்கி, சின்டிகேட் வங்கி ஆகியவை கனரா வங்கியோடு இணைக்கப்பட உள்ளது.

2. மகிளா வங்கி, பஞ்சாப் அன்ட் சிந்து வங்கி, யுனெடெட் பேங்க் ஆப் இந்தியா ஆகியவை பேங்க் ஆப்பரோடாவுடன் இணைக்கப்படலாம்.

3. ஆந்திரா வங்கி, மஹாராஷ்டிரா வங்கி, விஜயா வங்கி ஆகியவை யூனியன் பேங்க் ஆப் இந்தியாவுடன் சேர்க்கப்பட உள்ளது.

4. தீனா வங்கி, ஐ.டி.பி.ஐ. வங்கி, பேங்க் ஆப் இந்தியா ஆகியவை சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவுடன் இணைக்கப்பட உள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் திட்டம் இதுதானா?

இது தொடர்பாக கடந்த அக்டோபர் மாதம் டெல்லியில் நடந்த இந்திய பொருளாதார மாநாட்டில் நிதித்துறை அமைச்சகத்தின் முதன்மை பொருளாதார ஆலோசகர் சஞ்சீவ் சன்சாயல் பேசி இருந்தார். அவர் கூறுகையில், “ நாட்டில் தற்போது 22 பொதுத்துறை வங்கிகள் இருக்கின்றன. இவற்றை ஒன்றாக இணைத்து 10 வங்கிகளாக கொண்டு வர இருக்கிறோம். இதை 5 வங்கிகளாக குறைக்கவும் கூட அரசு தரப்பில் கூறப்பட்டு வருகிறது. வாராக்கடனை குறைக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அரசின் முதல் முன்னுரிமை என்பது இப்போது, வாராக்கடன் பிரச்சினையை தீர்ப்பதும், 2-வதாக வங்கிகளை இணைப்பதும்தான்’’ எனப் பேசி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக, அனைத்து இந்திய வங்கி ஊழியர் அமைப்பின் பொதுச்செயலர், வெங்கடாசலம்கூறுகையில், ''இது தவறான தகவல். இப்போதைக்கு, அது போன்ற முடிவு எதையும், வங்கி நிர்வாகங்கள் எடுக்கவில்லை,'' என, விளக்கம் அளித்தார்