ஐதராபாத்தில் புகார் அளித்தும் பலனில்லாததால், பாம்புடன் வந்து போராட்டத்தில் ஈடுபட்ட நபர்!
ஐதராபாத்தில் வீட்டிற்குள் பாம்பு நுழைந்ததாக தெரிவிக்கப்பட்ட புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படாததால், அந்த நபர் பாம்பை தானே பிடித்து நகராட்சி அலுவலகத்திற்கு கொண்டு வந்தார்.

ஐதராபாத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் பல்வேறு மாவட்டங்களில் மழைநீர் நிரம்பி வழிகிறது. அல்வால் பகுதியில் கொட்டித் தீர்த்த கனமழையால் மழைநீர் வீட்டிற்குள் புகுந்தது.
சம்பத்குமார் என்ற இளைஞர் வீட்டில் புகுந்த மழைநீரில் பாம்பு ஒன்று புகுந்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த இளைஞர் உடனடியாக நகராட்சியிடம் புகார் அளித்துள்ளார். பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. சுமார் 6 மணி நேரம் காத்திருந்த அந்த இளைஞர் இறுதியில் பொறுமை இழந்து அந்த பாம்பை தானே பிடித்தார்.
பின்னர், அந்த பாம்புடன் GHMC வார்டு அலுவலகத்திற்கு கொண்டு வந்த இளைஞர் பாம்பை மேசையில் இறக்கிவிட்டு போராட்டம் நடத்தினார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.