அனைத்து மருத்துவக் கருவிகள் மீதும் 2018ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி முதல் அதிகபட்ச சில்லரை விலையை ஒட்ட வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மக்களவையில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை, கப்பல், உரத்துறை அமைச்சகத்தின் இணை அமைச்சர் மன்சுக் எல் மான்டவியா கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறியதாவது-

பேக்கிங் செய்யப்பட்ட பொருட்களுக்கான விதிகளில் செய்யப்பட்ட திருத்தங்கள், மருத்துவ கருவிகளுக்கும் பொருந்தும் என்பதை மத்திய நுகர்வோர் , உணவு மற்றும் பொதுவழங்கல் துறை தெரிவித்துள்ளது. 
இதன்படி, 2018ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி முதல், மருத்துவ உபகரணங்கள் மீது அதிகபட்ச சில்லரை விலையை ஒட்டப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 

 பேக்கேஜ் செய்யப்பட்ட ஒவ்வொரு பொருட்கள் மீதும் பெயர், முகவரி, தொலைபேசி  எண், மின்-அஞ்சல், அலுவலக முகவரி ஆகியவை குறித்து குறிப்பிட்டு இருக்க வேண்டும். இந்த சட்டத்திருத்தம் என்பது, ஆன்-லைன்மூலம் பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கும் பொருந்தும். இவ்வாறு அவர் தெரிவித்தார். 

இதற்கிடையே கடந்த மார்ச் மாதம், மருந்து விலை ஒழுங்கமைப்பு குழு, 22 மருத்துவ உபகரணங்கள் மீது கண்டிப்பாக அதிகபட்ச சில்லரை விலை குறிப்பிடப் பட வேண்டும் எனத் தெரிவித்து இருந்தது. இதன்படி, இதய வால்வு, அறுவைசிகிச்சை தேவைப்படும் பொருட்கள், ஆணுறை, ஸ்டென்ட், ஒருமுறை பயன்படுத்தக்கூடிய ‘ஹைபோடெர்மிக் சிரிஞ்சு’, எலும்பு சிகிச்சைக்கான கருவிகள் உள்ளிட்டவை அடங்கும்.