The two-and-a-half Rupee note that ended 100th year

ஆங்கிலேயர் காலத்தில் வெளியிட்டு குறைந்த காலமே புழக்கத்தில் இருந்த ரூ.2.5 நோட்டு அச்சடிப்பட்டு நேற்றுடன் 100 ஆண்டுகள் நிறைவு பெற்றன.

கடந்த 1918ம் ஆண்டு, ஜனவரி 2ந்தேதி வெளியிடப்பட்ட இந்த நோட்டு நேற்றுடன் நூற்றாண்டை நிறைவு செய்தது. 2 ரூபாய் 8 அனாக்கள் அல்லது இரண்டரை ரூபாய் நோட்டு என்றும் அந்த நேரத்தில் மக்கள் இதை அழைத்தனர்.

இது குறித்து வங்கி ரூபாய் நோட்டுகளை சேகரித்து வரும் ஆர்வலர் டாக்டர் சூரஜ் கரண் ரதி கூறுகையில், “ இங்கிலாந்தில் கையாள் செய்யப்பட்ட, வெள்ளைத் தாளில் இந்த இரண்டரை ரூபாய் நோட்டு அச்சடிக்கப்பட்டது. மன்னர் வி.ஜார்ஜ் புகைப்படம், மற்றும் இங்கிலாந்து நிதிச் செயலாளர் எம்.எம்.எஸ். குபே ஆகியோரின் கையொப்பம் அதில் இடம் பெற்றுள்ளது. இந்த ரூபாய் நோட்டு எந்தெந்த மண்டலத்தைச் சேர்ந்தது என்பதை குறிப்பிடும் வகையில் ஏ-(கான்பூர்), பி(பாம்பே), சி(கொல்கத்தா), கே(கராச்சி), எல்.(லாகூர்), எம்(மெட்ராஸ்), ஆர்(ரங்கூன்) ஆகிய எழுத்துக்கள் ரூபாய் நோட்டில் இடம் பெற்று இருந்தன.

இந்த ரூபாய் நோட்டுகள் அந்தந்த மண்டலத்துக்குள் மட்டுமே செல்லுபடியாகும், ஒரு மண்டலத்தில் உள்ள நோட்டு மற்ற மண்டலத்தில் செல்லுபடியாகாது என்பதை குறிக்கும். ரூபாய் நோட்டின் பின்புறத்தில் 8 மொழிகளில் இரண்டரை ரூபாய் நோட்டு என்று எழுதப்பட்டு இருக்கும். அந்த நேரத்தில் அமெரிக்காவின் ஒரு டாலருக்கு ஈடாக இந்தியாவின் இரண்டரை ரூபாய் இருந்தது.

முதலாம் உலகப் போரின்போது(1914-18) வெள்ளிக்கு மிகுந்த தட்டுப்பாடு நிலவியது. அப்போது வெள்ளிக்காசின் மதிப்பு என்பது, வெள்ளியைக் காட்டிலும் குறைவாக இருந்தது, இதனால், வௌ்ளிக்காசை திரும்பப் பெற்று, அதில் உள்ள வெள்ளியை உருக்கி எடுக்க இங்கிலாந்து அரசு முடிவு செய்தது. இதனால், வெள்ளிக்காசை திரும்பப் பெற்று ரூபாய் நோட்டை வெளியிட்டது.

சிறிது ஆண்டுகள் மட்டுமே புழக்கத்தில் இருந்த இரண்டரை ரூபாய் நோட்டு கடந்த 1926ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி திரும்பப் பெறப்பட்டது’’ என்று தெரிவித்தார்.