கடந்த வருடம் ஜூலை 7ம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்த டிஎஸ்பி எம்.கே.கணபதி விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று இன்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. 

சிபிஐ விசாரணை கோரி, கணபதியின் தந்தை எம்.கே. குஷாலப்பா மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு மீது கருத்து தெரிவித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆதர்ஷ் குமார் கோயல், யுயு லலித் அடங்கிய அமர்வு, இந்த விவகாரத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று கூறியது.  
 
இந்த வழக்கில் சில சந்தேகங்கள் இருப்பதாகக் கூறிய நீதிமன்றம், இது கொலையா அல்லது தற்கொலையா என்பதை நேர்மையான முறையில் விசாரித்து அறிய வேண்டும் என்றும் கூறியது. 

மேலும், டிஎஸ்பி கணபதி, உள்துறை அமைச்சர் மற்றும் இரு உயர் அதிகாரிகள் மீது புகார் தெரிவித்திருந்ததையும் கருத்தில் கொண்டுள்ளதாகக் கூறிய நீதிமன்றம், இதனால் எதுவும் நேர்ந்திருக்கலாம் என்ற சந்தேகத்தையும் வெளிப்படுத்தியது. இதனால், இந்த விவகாரத்தில் சுதந்திரமான அமைப்பின் விசாரணை தேவைப்படுவதாகக் கூறியது. 

கர்நாடக அரசின் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் கபில் சிபல், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டால், இது மேலும் சிக்கலாக்கும் என்றும், தேவையான அனைத்து கோப்புகளையும் மாநில அரசின் விசாரணைக் குழு நீதிமன்றத்திடம் சமர்ப்பித்துவிட்டதாகவும் கூறினார். 

ஜார்ஜ் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் ஏ.எம். சிங்வி, உயிரிழந்த நபர், மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், அதற்கான மருத்துவ சிகிச்சைகளை எடுத்துக் கொண்டதாகவும், எனவே ஜார்ஜ் மீது கணபதி கூறிய குற்றச்சாட்டுக்கள் தவறானவை என்றும் தாற்காலிகத் தீர்வை நோக்கி நகர்த்தியதாகவும் கூறினார். 

குஷாலப்பா சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் ஜெயந்த பூஷண், சிஐடியின் அறிக்கைகளை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். அந்த அறிக்கைகள், தடவியல் துறையினரின் அறிக்கை சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்பே தயாரிக்கப்பட்டு, அளிக்கப்பட்டு விட்டதாகவும், மாநில உள்துறை அமைச்சர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருப்பதால், ஒரு மாநில விசாரணை அமைப்பே அதனை விசாரிப்பது சரியாக இருக்காது என்றும் வாதிட்டார். 

கர்நாடக மாநில எதிர்க்கட்சிகள் கோரியபடி, மாநில உயர் நீதிமன்ற நீதிபதி கேசவ நாராயணன் தலைமையிலான ஒரு நபர் நீதி விசாரணை ஆணையம், மேலும் 45 பேர்களிடம் விசாரணை முடிக்கப்பட்டும், நீதி விசாரணை ஆணையத்தின் அறிக்கை அளிக்கப்படாமல்  உள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது.

முன்னதாக, குஷாலப்பா மற்றும் அவரது இன்னொரு மகன் மாநில அரசை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் சிபிஐ விசாரணை கோரி தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது.