குழந்தைகளின் ஆபாச படங்கள் இணையதளங்களில் வெளியிடப்படுவதைத் தடுக்க தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருவதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு நடத்திய விசாரணையின்போது மத்திய அரசு தாக்கல் செய்த அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது-

குழந்தைகளின் ஆபாச படங்கள் வெளியிடப்படுவதைத் தடுக்க அமெரிக்காவைச் சேர்ந்த ‘காணாமல் போன மற்றும் சுரண்டலுக்கு உள்ளாகும் குழந்தைகள் நல மைய’த்தின் உதவியை மத்திய அரசு நாட திட்டமிட்டுள்ளது.

இந்த அமைப்பு உலக அளவில் காணாமல் போகும் குழந்தைகள் பற்றிய விபரங்களை இலவசமாக வழங்கி வருகிறது. இது போன்ற கடத்தப்பட்ட குழந்தைகள் பற்றிய விபரங்களை 99 நாடுகளில் இருந்து சேகரித்து இந்த நிறுவனம் அளித்து வருகிறது.

சிறுமிகள் மற்றும் குழந்தைகளின் ஆபாச படங்களை வெளியிடுவதை தடுக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. என அந்த அறிக்கையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வாதாடிய மத்திய அரசு வழக்கறிஞர் பிங்கி ஆனந்த் கூறியதாவது:-

நாட்டில் உள்ள 3,522 இணையதளங்கள் குழந்தைகளின் ஆபாச படங்களை வெளியிட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதைத் தடுத்து நிறுத்த பள்ளிகளில் ஜாமர்களைப் பயன்படுத்துவது பற்றி பரிசீலித்து வருகிறோம். ஆனால் பள்ளிக்கூட பேருந்துகளில் ஜாமர்களை பயன்படுத்துவது சாத்தியமில்லாததாக உள்ளது.

அரசு தரப்பு வாதத்தை கேட்ட நீதிபதிகள், குழந்தைகளின் ஆபாச படங்கள் இணையதளங்களில் வெளியாவதை தடுக்க மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கை அளிக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளனர்.