தலைநகர் டெல்லி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் வாகனங்கள் வைத்து இருப்பவர்கள் மாசுக்கட்டுப்பாட்டு சான்றிதழ் இல்லாமல் வாகனங்களுக்கு இன்சூரன்ஸ் புதுப்பிக்க கூடாது என்று உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புகை மாசுவைக் குறைக்கும் நோக்கில் இந்த உத்தரவை உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எம்.சி. மேத்தா காற்றுமாசுவைக் குறைக்கும் நோக்கில் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுத் தாக்கல் செய்து இருந்தார். அந்த மனு நீதிபதி மதன் பி லோக்கூர் தலைமையில் நேற்று விசாரணைக்கு வந்தது அவர் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது-

டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளை மாசில் இருந்து பாதுகாக்க மாசுக்கட்டுப்பாட்டு ஆணையம் அளித்தபரிந்துரைகளை ஏற்கிறோம். அதேபோல, டெல்லி மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் வாகனங்கள் வைத்து இருப்போர், மாசுக்கட்டுப்பாட்டு சான்றிதழ் வழங்காமல் வாகனங்களுக்கு இன்சூரன்ஸ் புதுப்பிக்க கூடாது.

இதை உறுதி செய்ய மத்திய அரசுக்கு 4வாரங்கள் அவகாசம் அளிக்கப்படுகிறது. அனைத்து மாசுக்காட்டுப்பாடு மையங்களும் முறைப்படி செயல்படுகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

அதேபோல டெல்லி மற்றும் அதைச் சுற்றி உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள பெட்ரோல் நிலையங்களில் மாசுக்கட்டுப்பாட்டு சோதனை மையங்கள் நிறுவப்படுவதை மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகமும் உறுதி செய்ய வேண்டும்

இவ்வாறு அவர் உத்தரவிட்டார்.