ஜம்மு காஷ்மீரில் நிலவும் பதற்றமான சூழல் குறித்து, ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை நேரில் சந்தித்து பேசினார்.

ஜம்மு காஷ்மீரில் கடந்த 9-ந்தேதி நகர் மக்களைவை தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வன்முறையாளர்கள் கற்களை வீசி பாதுகாப்பு படையினரை தாக்கினர்.

அப்போது, இரு தரப்புக்கும் இடையே கடும் சண்டை ஏற்பட்டது. இதில் பாதுகாப்பு படையினர் துப்பாக்கியால் சுட்டதில் 8 பேர் உயிரிழந்தனர்.

இதையடுத்து காஷ்மீரில் பெரும் பதற்றம் ஏற்படுத்தியது. இதற்கிடையே ராணுவ வீரர் ஒருவர் போராட்டக்காரர்களால் தாக்கப்படுவது போன்ற விடியோ ஒன்று வெளியானது.

இதற்கு பல்வேறு தரப்பினரும் போராட்டக்காரர்களை கடுமையாக கண்டித்திருந்தனர். இதன்பின்னர் காஷ்மீர் இளைஞர் ஒருவர் ராணுவ ஜீப்பின் முகப்பில் கட்டப்பட்டு, அவரை மனிதக் கேடயமாக ராணுவத்தினர் பயன்படுத்திய காட்சி வெளியானது.

இந்த சம்பவம் நடந்த 9-ந்தேதியன்று போலீசார் தங்களை அழைத்து போராட்டக்காரர்களிடம் இருந்து காப்பாற்றும்படி கேட்டுக் கொண்டதாக ராணுவம் தரப்பில் கூறப்படுகிறது. அவர்களை காப்பாற்றுவதற்காக பரூக் தார் என்ற அந்த இளைஞர் மனித கேடயமாக பயன்படுத்தப்பட்டார் என தகவல்கள் வெளியாகின.

இந்த விவகாரத்தில் ராணுவத்தினரை பல்வேறு தரப்பினர் கண்டித்தனர். இத்தகைய பதற்றமான சூழலில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் நேற்று சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பு தோவலில் இல்லத்தில் நடைபெற்றது. அப்போது, காஷ்மீரில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தோவலிடம் ராவத் விவரித்தார்.