The state government has decided to launch the Free Food Supply Program at Alappuzha on January

கேரளாவில் வாழும் மக்களில் பசியோடு இருப்பவர்களுக்கு ஒருவேளையாவது, தரமான உணவு அளிக்கும் இலவச உணவு வழங்கும் திட்டம் ஆழப்புழா நகரில் 2018ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி தொடங்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.

அதேசமயம், வெளியூரில் இருந்து வரும் வறுமையில் வாடும் மக்கள், பயணிகளுக்கு குறைந்த விலையில் உணவு அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. காலை சிற்றுண்டி ரூ.10க்கும்,மதிய உணவு ரூ.20க்கும் வழங்க முடிவு செய்துள்ளது.

இது குறித்து கேரள உணவு மற்றும் பொது வழங்கல் துறை அமைச்சர் பி. திலோத்தமன் ஆழப்புழா நகரில் நிருபர்களிடம் கூறியதாவது-

கேரள அரசின் இலவச உணவு அளிக்கும் திட்டம் என்பது, உண்மையில் பசியோடு இருப்பவர்களுக்கு, தரமான உணவை இலவசமாக, நாள் ஒன்றுக்கு ஒருமுறையாவது வழங்குதல் ஆகும்.இந்த திட்டம் சோதனை முயற்சியாக, முதலில் ஆழப்புழா நகரில் செயல்படுத்தப்பட உள்ளது. அதேசமயம், ஆழப்புழா நகருக்கு வரும் ஏழை மக்கள், பயணிகளுக்கு குறைந்த விலையில் உணவும் வழங்கப்படும்.

ஆழப்புழா,திருவனந்தபுரம் நகரில் இந்த திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல் கட்டமாக ஆழப்புழாவில் தொடங்கப்படுகிறது. இதற்காக ரூ.70 லட்சத்தை அரசு ஒதுக்கியுள்ளது. எங்கள் நோக்கம் காலை உணவு ரூ.10க்கும், மதிய உணவு ரூ.20க்கும் வழங்குவதாகும்.

இந்த திட்டத்தை செயல்படுத்த மாவட்ட கலெக்டர் டி.வி. அனுபமா, மாவட்ட வட்ட வழங்கல் அதிகாரி ஹரி பிரசாத், ஆகியோர் தலைமையில் இந்த திட்டம் கண்காணிக்கப்படும். மேலும், தன்னார்வ குழுக்களும் பங்கேற்க ஊக்கம் அளிக்கப்படும். படுத்தபடுக்கையாக இருக்கும் நோயாளிகள், முதியோர்களுக்கு வீடு தேடிச் சென்று உணவு வழங்கவும் நாங்கள் திட்டமிட்டுள்ளோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.