The sleeping boy near the dead mother body!
உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் தாயை அனுமதித்த சிறுவன், சிறிது நேரத்துக்குப்பிறகு தாய் இறந்தது அறியாமல் அவர் அருகே படுத்து தூங்கிய சம்பவம் ஐதராபாத்தில் நடந்துள்ளது. இந்த காட்சியைப் பார்த்த மருத்துவர்களுக்கும், ஊழியர்களுக்கும் கண்ணீரை வரவழைத்துள்ளது.
தெலங்கானா மாநிலம், ஐதராபாத், ஓஸ்மானியா அரசு மருத்துவமனையில், நேற்று முன்தினம் இரவு 11.30 மணியளவில் ஒரு இளம் பெண்ணும், அவரின் 5 வயது மகனும் வந்தனர். அந்த பெண், தன்னால் சுவாசிக்க சிரமமாக இருப்பதாக மருத்துவமனை டாக்டர்களிடம் கூறியுள்ளார். அவரது நிலையை அறிந்த டாக்டர்கள், அந்த பெண்ணுக்கு, உடனடியாக செயற்கை சுவாசத்துக்கு ஏற்பாடு செய்தனர். மேலும் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர்.
அந்த பெண்ணுக்கு, மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தபோதிலும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இளம் பெண் உயிரிழந்ததை அடுத்து, மருத்துவமனை நிர்வாகம், போலீசுக்கு தகவல் கொடுத்தது. தாய் இறந்ததை அறியாமல் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த அந்த சிறுவன், உயிரிழந்த இளம் பெண்ணின் அருகே படுத்து சிறிது நேரத்தில் உறங்கி விட்டான்.
சிறிது நேரத்துக்குப் பிறகு, அந்த அறைக்கு வந்த மருத்துவர்கள், ஊழியர்களும் இந்த காட்சியைப் பார்த்து கண்கலங்கி விட்டனர். இதன் பின், இளம் பெண்ணின் உடலை, ஸ்ட்ரெச்சரில் பிணவறைக்கு கொண்டு சென்றனர். அந்த சிறுவனை, மற்ற நோயாளிகளின் உறவினர்கள், தங்கள் வசம் வைத்துக் கொண்டனர்.
இளம் பெண் வைத்திருந்த சிறிய பையில் இருந்த ஆதார் கார்டில், கட்டுமான தொழிலில் தினக்கூலியாக வேலை செய்து வருபவர் என்றும், அவரது பெயர் சமீனா சுல்தானா என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, உதவும் கரங்கள் தொண்டு நிறுவன அதிகாரி முஸ்தாபா அசன் அஸ்காரியிடம், உயிரிழந்த பெண்ணின் உறவினர்களைக் கண்டுபிடிக்க மருத்துவர்கள் கூறினர்.
உதவும் கரங்கள் நிறுவனத்தை சேர்ந்தவர்கள், போலீசார் உதவியுடன் 18 மணி நேரத்துக்குப் பிறகு, சுல்தானாவின் பெற்றோர்களைக் கண்டுபிடித்தனர். அவர்கள் அனைவரும் ஐதராபாத் நகரில் வசிந்து வருகின்றனர். அவர்களிடம் சுல்தானா இறந்த தகவலைக் கூறி, மருத்துவமனைக்கு அழைத்து வந்து, சுல்தானாவின் உடலை ஒப்படைத்தனர். உடலைக் கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் வசதியும் தொண்டு நிறுவனம் செய்து கொடுத்தது. சுல்தானாவின் மகன், அவரது பெற்றோரிடம் ஒப்ப்டைக்கப்பட்டது.
