The Shiv Sena party has said that it will soon decide to continue with the BJP.
நாட்டில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு, விவசாயிகள் தற்கொலை போன்ற பழிகளுக்கு நாங்கள் ஆளாக முடியாது. பா.ஜனதா கூட்டணியில் தொடர்வது குறித்து விரைவில் முடிவு செய்வோம் என்று சிவசேனா கட்சி தெரிவித்துள்ளது.
மஹாராஷ்டிரா மாநிலத்தில் பா.ஜனதா, சிவசேனா கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. மத்தியில் உள்ள பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியிலும் சிவசேனா கட்சி இடம்பெற்றுள்ளது. கூட்டணியில் சிவசேனா கட்சி இருந்தாலும், தொடர்ந்து பா.ஜனதா கட்சியை மாநிலத்திலும், மத்தியில் கடுமையாக விமர்ச்சித்து வருகிறது.
கூட்டணியில் தொடர்வதா?
சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் மும்பையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது-
எப்போதும் இல்லாத அளவுக்கு விலைவாசி உயர்வு, விவசாயிகள் தற்கொலை உள்ளிட்ட எந்த பிரச்சினையையும் மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசு தீர்க்கவில்லை. இந்த பிரச்சினைகளுக்கு நாங்களும், எங்கள் கட்சியும் பொறுப்பு ஏற்க முடியாது. இந்த பழியை நாங்கள் பகிர்ந்து கொள்ள முடியாது. பா.ஜனதா கூட்டணியில் தொடர்வதா அல்லது கூட்டணியை விட்டு வௌியேறுவதா?என்பது குறித்து விரைவில் நாங்கள் முடிவு செய்வோம்’’ எனத் தெரிவித்தார்.
கண்டனம்
இதற்கிடையே மத்திய சுற்றுலா மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் கண்ணன்தானம் பெட்ரோல் விலை உயர்வு நியாயப்படுத்தி சமீபத்தில் பேசி இருந்தார். அதில், வாகனங்கள் வைத்து இருப்பவர்கள் ஒன்றும் பட்டினி கிடக்கவில்லை என்று தெரிவித்தார்.
இதைக் கண்டித்து, சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னா தலையங்கத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது-
அவமானம்
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் கூட நாட்டில் உள்ள ஏழை, நடுத்தர மக்கள் அவமானப்படவில்லை. ஆனால், மத்திய அமைச்சர் கண்ணன்தானத்தின் கடுமையான கருத்தால், நடுத்தர மக்கள், ஏழைமக்கள் புண்படுத்தப்பட்டுள்ளனர்.
காங்கிரஸ் ஆட்சியில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு இருந்தபோது, இப்போது அமைச்சர்களாக இருக்கும் ராஜ்நாத் சிங், ஸ்மிருதிஇரானி, சுஷ்மா சுவராஜ் ஆகியோர் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினார்கள்.
தகுதியில்லாதவர்கள்
ஆனால், இன்று தகுதியில்லாதவர்கள்,(பா.ஜனதா கட்சி) மக்களோடு தொடர்பில் இல்லாதவர்கள் அரசியலும், ஆட்சியிலும் இருக்கும்போது, என்ன செய்வது என்று தெரியாமல் நாடு விழிபிதுங்கி நிற்கிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வே விவசாயிகள் தற்கொலைக்கு முக்கியக் காரணமாகும்.
சைக்கோ
புல்லட் ரெயில் திட்டத்துக்கு செலவு செய்யும் பணத்தை நாட்டில் உள்ள பணவீக்கத்தை கட்டுப்படுத்த செலவு செய்தால் சிறப்பானதாக இருக்கும். ஆனால், சில மனநோய் பிடித்தவர்கள்(சைக்கோ) வாகனங்கள் வைத்துள்ளவர்கள் பெட்ரோல் வாங்க முடியாமல் பட்டினி கிடக்கவில்லை என்று கூறுகிறார்கள்.
மக்கள் சாப்பிடுவதற்கு போதுமான உணவு இல்லாமல் இன்று இருக்கிறார்கள். விவசாயிகளின் நிதி நிலைமை மோசமாக இருந்து வருகிறது, பணவீக்கத்திலும், வேலையின்மையிலும் நாடு சிக்கித் தவிக்கிறது.
மனநோய்
இந்த நேரத்தில் யாராேனும் புல்லட் ரெயில் திட்டத்தை புகழ்ந்தால் அவர்களை மனநோய் மருத்துவமனைக்கு அனுப்பி அவர்களின் மூளையை பரிசோதிக்க வேண்டும்
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
