Fact Check: ராகுல் காந்தி அணிந்திருக்கும் ஷூ ரூ.3 லட்சமா?; உண்மை என்ன தெரியுமா?
ராகுல் காந்தி அணிந்திருக்கும் ஷூ ரூ.3 லட்சம் என தகவல் பரவிய நிலையில், அதன் உண்மை விலை தெரியவந்துள்ளது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில், அரசியல் சாசனம் மீதான விவாதத்தின்போது அனைத்து கட்சி எம்.பி.க்களும் பேசினார்கள். காங்கிரஸ் எம்.பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியும் அரசியல் சாசனம் குறித்து பேசினார். மோடி அரசில் அரசியல் சாசனம் நசுக்கப்படுவதாக அவர் குற்றம்சாட்டி இருந்தார்.
இதனைத் தொடர்ந்து இந்திய அரசியல் சாசனத்தை பாதுகாக்க வேண்டியும், அரசியல் சாசனத்தை அவமதிக்கும் பாஜகவை கண்டித்தும் இந்தியா கூட்டணி எம்..பி.க்கள் போராட்டம் நடத்தினார்கள். அப்போது ராகுல் காந்தி அணிந்திருந்த ஷூ சமூகவலைத்தளத்தில் வைரலானது. அதாவது ராகுல் காந்தி ரூ.3 லட்சம் மதிப்புடைய விலை உயர்ந்த ஷூவை அணிந்துள்ளார் என்று பாஜகவினர் உள்பட பலரும் தகவல் பரப்பினர்கள்.
அரசியல் சாசனம் குறித்து பேசும் ராகுல் காந்தி, ஏழை, எளிய மக்களின் நிலை குறித்து பேசும் ராகுல் காந்தி விலை உயர்ந்த ஷூவை அணிந்துள்ளது ஏன்? என பாஜகவினர் சமூகவலைத்தளத்தில் வறுத்தெடுத்தனர். மேலும் பாஜக ஆட்சியில் அதானி, அம்பானி சொகுசாக வாழ்வதாக குற்றம்சாட்டி வரும் ராகுல் காந்தி அதானி, அம்பானிக்கு இணையாக இவ்வளவு விலை உயர்ந்த ஷூவை அணிவது ஏன்> என்றும் பலரும் கேள்வி எழுப்பினார்கள்.
இதனால் ராகுல் காந்தி அணிந்திருக்கும் ஷூ இணையதளத்தில் கடுமையாக வைரலானது. ஆனால் உண்மையில் ராகுல் காந்தி அணிந்திருக்கும் ஷூவின் விலை ரூ.3 லட்சம் இல்லை என்பது தெரியவந்துள்ளது. அதவாது ராகுல் காந்தி ON நிறுவனத்தின் Cloud 5என்ற மாடல் ஷூவை அணிந்துள்ளார். அந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இந்த ஷூவின் விலை ரூ.24,559 என்று போடப்பட்டுள்ளது என்று காங்கிரஸ் கட்சியினர் ஆதாரத்துடன் நிரூபித்துள்ளனர்.
இதனால் ராகுல் காந்தியின் ஷூ விவகாரம் இப்போது முடிவுக்கு வந்துள்ளது. எதிர்க்கட்சிகளை கொள்கையால் வெல்ல முடியாத பாஜக, இதுபோன்று பொய் பரப்பும் செயல்களில் ஈடுபட்டு வருகிறது எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர். ''நாடாளுமன்றத்தில் பாஜக கூட்டணி அரசு மீது ராகுல் காந்தி கடும் விமர்சனம் வைத்து வருகிறார். இதை தாங்கிக் கொள்ள முடியாத பாஜக, பொய் புகார்கள் மூலம் அவரை ஓரம்கட்ட முயற்சிக்கிறது'' என்று காங்கிரஸார் தெரிவித்துள்ளனர்.