The railways has raised the age limit of retiring employees from 62 to 65.

ஓய்வு பெற்ற ஊழியர்களை பணிக்கு அமர்த்தும் வயது வரம்பை 62ல் இருந்து 65 ஆக உயர்த்தி ரெயில்வேவாரியம் உத்தரவிட்டுள்ளது.

இதன் மூலம் அனுபவம் மிக்க ஊழியர்கள் தங்களின் சேவையை ரெயில்வேக்கு இன்னும் கூடுதலாக அளிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓய்வு வயது

ரெயில்வே துறையில் பணியாற்றும் ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது தற்போது 60 ஆக உள்ளது. இதில் ஓய்வு பெற்ற ஊழியர்களை மீண்டும் பணிக்காக கூடுதலாக 2 ஆண்டுகள் நியமித்துக் கொள்ளலாம் அல்லது நீட்டிப்பு அளிக்கலாம் என்ற விதிமுறை இருந்தது. அதாவது 62 வயதை அவர்களை பணியில் வைத்துக்கொள்ளலாம் என விதிமுறை இருந்தது.

உத்தரவு

இந்நிலையில் இதை திருத்தி, ஓய்வு பெற்ற ஊழியர்களை கூடுதலாக 3 ஆண்டுகளாக பணிக்கு அமர்த்தலாம் என்று கூறி ரெயில்வே வாரியம் அனைத்து பொது மேலாளர்களுக்கும் நேற்று முன் தினம் கடிதம் எழுதியுள்ளது.

65 ஆக உயர்வு

அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது, “ ஓய்வு பெற்ற ஊழியர்களை பணிக்கு அமர்த்தி இருந்தால், அவர்களின் பணிக் காலத்தை 2019ம் ஆண்டு, ஜனவரி 12ந்தேதி வரை நீட்டிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் 2018, செப்டம்பர் 14 ந்தேதி வரை பணியில் வைத்து இருக்கலாம் என்று இருந்தது’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன் ரெயில்வே துறையில் பணியாற்றும் ஊழியர்கள் 60 வயதில் ஓய்வு பெற்றாலும், அவர்களுக்கு கூடுதலாக 2 ஆண்டுகள் பணி நீட்டிப்பு வழங்கப்பட்டு இருந்தது. இப்போது, அதை 3 ஆண்டுகள் நீட்டித்து, 65 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

எப்படி ஊதியம்?

இந்த திட்டத்தின் கீழ் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊதியம் என்பது, ஓய்வு பெறும் போது ஒரு ஊழியர் பெற்ற ஊதியத்தில் இருந்து ‘பென்ஷன்’ தொகையை கழித்துக்கொண்டு மீதத் தொகை வழங்கப்படும்.

உதாரணமாக ஒரு ஊழியர் ஓய்வு பெறும்போது ரூ.30 ஆயிரம் ஊதியம் பெற்று இருந்து, ஓய்வூதியமாக ரூ.10 ஆயிரம் பெறுவதாக இருந்தால், அவரை பணியில் அமர்த்தும் பட்சத்தில் ஓய்வூதியத் தொகை ரூ.10 ஆயிரம் கழித்துக்கொள்ளப்பட்டு ரூ. 20 ஆயிரம் ஊதியமாக தரப்படும்.