காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தியை காணவில்லை என கடந்த வாரம் அமேதி தொகுதியில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்த நிலையில், இந்த வாரம் ரேபரேலி தொகுதியில் சோனியா காந்தியை காணவில்லை என போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ரேபரேலி தொகுதியின் மக்களவை எம்.பி. சோனியா காந்தியை காணவில்லை. கண்டுபிடித்து தருபவர்களுக்கு தக்க பரிசு வழங்கப்படும் என் போஸ்டர்கள் ரேபரேலி நகரின் கோரா பஜார், மகாநந்த்பூர், கவர்மெனட் காலணி ஆகிய இடங்களில் ஒட்டப்பட்டுள்ளன. 

அந்த போஸ்டரில், நாடாளுமன்ற தொகுதி எம்.பி.யால் ஏமாற்றப்பட்ட ரேபரேலி மக்கள் சார்பில் என்று எழுதப்பட்டுள்ளது. ஆனால், இந்த போஸ்டர்களை பார்த்த சில மணி நேரங்களில் காங்கிரஸ் தொண்டர்கள் கழித்து எறிந்தனர். 

ரேபரேலி தொகுதிக்கு கடந்த ஒரு ஆண்டாக சோனியா காந்தி வந்து மக்களைச் சந்திக்க வில்லை. அதேபோல துணைத் தலைவர் ராகுல் காந்தி, அமேதி தொகுதிக்கு கடந்த 6 மாதமாகச் செல்லவில்லை.  உத்தரப்பிரதேசத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது பிரசாரத்துக்கு மட்டும் ராகுல் வந்திருந்தார். ஆனால், சோனியாகாந்திக்கு அப்போது உடல்நலக்குறைவாக இருந்ததால், அவர் பங்கேற்கவில்லை.

இது குறித்து காங்கிரஸ் தலைவர் ஒருவர் கூறுகையில், “ இது பா.ஜனதா கட்சி, ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அவதூறு பிரசாரம். இந்த போஸ்டர்களுக்கு பின்புலம், அவர்கள்தான் இருக்கிறார்கள்’’ என்றார்.