மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி மீண்டும் போட்டியிட அனுமதிப்பது இல்லை என அக்கட்சி முடிவு செய்துள்ளது.

மாநிலங்களவை உறுப்பினராக உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியின் பதவிக்காலம் வருகிற ஆகஸ்டுடன் முடிவடைகிறது. அவர் ஏற்கனவே 2 முறை மாநிலங்களவை உறுப்பினராக பதவி வகித்துவிட்டார்.

இந்நிலையில் 3-வது முறையாக அவரை மீண்டும் மாநிலங்களவை தேர்தலில் நிறுத்தலாமா என்பது பற்றி அக்கட்சியின் மத்திய கமிட்டி நேற்று கூடி விவாதித்தது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் ஒருவர் 2 முறைக்கு மேல் மாநிலங்களவை உறுப்பினராக பதவி வகிக்கக்கூடாது என்பது ஒரு நெறிமுறையாக பின்பற்றப்படுகிறது. இதன் அடிப்படையில் சீதாராம் யெச்சூரி மாநிலங்களவைக்கு மீண்டும் போட்டியிடக்கூடாது என மத்திய கமிட்டியின் உறுப்பினர்கள் சிலர் வாதிட்டதாக கருதப்படுகிறது.

மேலும் காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் மாநிலங்களவைக்கு சீதாராம் யெச்சூரி போட்டியிடக்கூடாது என கேரள மாநில கட்சி நிர்வாகிகள் உட்பட மத்திய கமிட்டி உறுப்பினர்கள் பலர் கருத்து தெரிவித்ததாக கருதப்படுகிறது.

கேரளா, ஆந்திரா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த மத்திய கமிட்டி உறுப்பினர்களில் பெரும்பாலோர் யெச்சூரி போட்டியிட எதிர்ப்பு தெரிவித்தனர் என்று கூறப்படுகிறது. சீதாராம் யெச்சூரியை மீண்டும் வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை மார்க்சிஸ்ட் கட்சியின் மேற்கு வங்காள, திரிபுரா மாநிலக் கிளைகள் முன்வைத்திருந்தன என்பது குறிப்பிடத் தக்கதது.

இதையடுத்து நடைபெற்ற வாக்கெடுப்பின் அடிப்படையில், மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற உள்ள மாநிலங்களவை தேர்தலில் சீதாராம் யெச்சூரியை வேட்பாளராக நிறுத்தப்போவதில்லை என அக்கட்சியின் மத்திய கமிட்டி முடிவு செய்துள்ளது.

எனவே சீதாராம் யெச்சூரி மீண்டும் மாநிலங்களவை உறுப்பினராக வாய்ப்பு இல்லை.

மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் சீதாராம் யெச்சூரி போட்டியிட்டால் ஆதரவு கொடுக்க தயார் என காங்கிரஸ் ஏற்கனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.