நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது. இது வரும் ஆகஸ்ட் 11-ந்தேதி வரை நடக்கிறது.

விவசாயிகள் போராட்டம், காஷ்மீர் அமர்நாத் பக்தர்கள் மீது தாக்குதல், சீன பிரச்சினை, பசுக் குண்டர்கள் விவகாரம் உள்ளிட்டவற்றை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதால் அனல் பறக்கும் விவாதம்நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடர் நாளை தொடங்கும் அதே வேளையில் ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குப்பதிவும் நடக்கிறது. 

கூட்டத் தொடர் தொடங்கியவுடன், மக்கள் அவை மற்றும் மாநிலங்கள் அவையில் சமீபத்தில் இறந்த வினோக் கண்ணா, அனில் மாதவ் தேவே, காங்கிரஸ் எம்.பி. பல்வை கோவர்தன் ரெட்டி ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தி அவை முதல்நாள் ஒத்திவைக்கப்படும். 

இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் பல்வேறு முக்கிய விஷயங்களை எழுப்பி ஆளும் பா.ஜனதா கூட்டணி அரசுக்கு கடும் குடைச்சலைத் தரப்போவது உறுதியாகியுள்ளது. சமீபத்தில் துணை ஜனாதிபதி வேட்பாளரைத் தேர்வு செய்ய கூடிய கூட்டத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட 18 எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைந்து பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி மத்திய அரசுக்கு கடும் அழுத்தத்தை தர முடிவு செய்துள்ளன. 

அதை உறுதி செய்யும் விதமாக, காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம்நபி ஆசாத் பேசுகையில், “ காஷ்மீர் விவகாரம், அமர்நாத் பக்தர்கள் மீதான தாக்குதல், சீனாவுடன் இந்தியாவின் நிலை ஆகிய பிரச்சினைகள் குறித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மத்தியஅரசிடம் எழுப்பும். காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஅரசு பேச்சுக்கான அனைத்து வாயில்களையும் அடைத்துவிட்டது.இதனால், காஷ்மீர் பள்ளத்தாக்கு சுவாசிக்க முடியாமல் திணறுகிறது’’ என்று தெரிவித்துள்ளார். 

அதேபோல, சமீபகாலமாக நாட்டில் பசுப்பாதுகாப்பு என்ற பெயரில் பசுக்குண்டர்கள் தலித், முஸ்லிம் மக்களை குறிவைத்து நடத்திவரும் தாக்குதல் குறித்து இடது சாரிகளும், எதிர்க்கட்சிகளும் வரிந்துகட்டி பிரச்சினைகளை எழுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த சூழலைச் சமாளிக்கும் விதமாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நேற்று கூடிய மத்தியஅரசு, பசுக்குண்டர்களை மீது மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கட்டளையிட்டு, எதிர்க்கட்சிகளை அமைதிப்படுத்த முயற்சி மேற்கொண்டது. 

பொருளாதாரம், வேலைவாய்ப்பு விஷயங்களையும் எதிர்க்கட்சிகள் கையில் எடுக்கும். குறிப்பாக இளைஞர்களின் வேலையின்மை அளவு அதிகரித்து, புதிய வேலை வாய்ப்பு உருவாக்கும் தொடர்ந்து குறைந்து வருகிறது. தேர்தல் நேரத்தில் மோடி அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று ஐக்கியஜனதா தளம் கட்சித் தலைவர் சரத்யாதவ் குற்றம்சாட்டியுள்ளார் என்பதால் இந்த விவகாரமும் சூடுபிடிக்கும் 

மேலும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, மற்றும் லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர்கள் ஊழல் செய்துள்ளதாக கூறி சி.பி.ஐ. மற்றும் அமலாக்கப்பிரிவு எடுத்த நடவடிக்கைகள் குறித்து அந்த கட்சியின் எம்.பி.கள் அவையில் புயலைக் கிளப்புவார்கள். இந்த விசயத்தில் மம்தா கட்சிக்கும், லாலு கட்சிக்கும் இடதுசாரிகளும், ஐக்கிய ஜனதா தளமும் ஆதரவு அளிக்கமாட்டார்கள் எனத் தெரிகிறது. 

அதுமட்டமல்லாமல், அசாம் மாநிலம், வடகிழக்கு மாநிலங்களில் நிலவும் மழைவௌ்ளச் சேதம், மேற்குவங்கத்தில் கூர்காலாந்து அமைக்க கடந்த 30 நாட்களாக நடந்துவரும் போராட்டம், ரூபாய் நோட்டுதடையால் ஏற்பட்ட பிரச்சினைகள், வேலை இழப்புகள், பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்தல், சமீபத்தில் இஸ்ரேல் சென்ற பிரதமர் மோடியின் பயணம் ஆகியவை குறித்தும் எதிர்க்கட்சிகள் விவாதிக்க முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. 

இதற்கிடையே மக்களவையில் 21 மசோதாக்களும், மாநிலங்களவையில் 42 மசோதாக்களும் கிடப்பில் உள்ளதால் அதை நிறைவேற்ற எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு தரவேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

நாடாளுமன்ற விவகாரத்துறை இணையமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி கூறுகையில், “ மழைக்காலக் கூட்டத்தொடரை ஆக்கப்பூர்வமான வகையில், சமூகமாக நடத்த அரசு விரும்புகிறது. கிடப்பில் உள்ள பல்வேறு மசோதாக்களை நிறைவேற்ற எதிர்க்கட்சிகளிடம் இருந்து ஒத்துழைப்பை அரச எதிர்பார்க்கிறது. 
நடப்பு பிரச்சினைகள் குறித்து விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தால், அது குறித்து அவையின் அலுவல் ஆலோசனைக் குழுவும், சபாநாயகரும் தேதியும், நேரத்தையும் முடிவு செய்வார்கள்’’ எனத் தெரிவித்துள்ளார்.