The parliamentary monsoon session begins on July 17
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் ஜூலை 17-ந் தேதி தொடங்கி, ஆகஸ்ட் மாதம் 11-ந் தேதிவரை நடக்கிறது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி தேர்தலில் வாக்குப்பதிவு நடக்கும் நாளான 17-ந் தேதி அன்று, கூட்டத்தொடர் தொடங்குகிறது. எம்.பி.க்கள் வந்து வாக்களிக்கவும், கூட்டத்தொடரில் கலந்து கொள்ளவும் வசதியாக தொடங்குகிறது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இந்த ஆண்டு இரு அமர்வுகளாகவும், முன்கூட்டியே தொடங்கியது. அதாவது ஜனவரி 31-ந் தேதி தொடங்கிய பட்ஜெட்கூட்டத்தொடர் பிப்ரவரி 9-ந் தேதி வரை நடந்தது. 2-வது அமர்வு மார்ச் 9-ந் தேதி தொடங்கி ஏப்ரல் 12-ந் தேதி வரை நடந்தது. இந்தமுறை ரெயில்வேத் துறைக்கு தனியாக பட்ஜெட்தாக்கல் செய்யப்படாமல் பொது பட்ஜெட்டுடன் இணைக்கப்பட்டது.
இந்த கூட்டத்தொடரில் பல்வேறு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்ட நிலையில், குறிப்பாக நாடுமுழுவதும் கொண்டுவரப்படும் மிகப்பெரிய வரிச்சீர்திருத்தமான ஜி.எஸ்.டி. மசோதா இரு அவைகளில் நிறைவேறியது.
பா.ஜனதா கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் வேட்புமனுத் தாக்கல் செய்து முடித்தபின், நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவைக் கூட்டம் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நேற்று முன் தினம் மாலை நடந்தது. அதில்,நாடாளுமன்ற மழைகாலக் கூட்டத்தொடர் வரும் ஜூலை 17-ந் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11ந் தேதி வரை நடக்க நாடாளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழு பரிந்துரை செய்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
வழக்கமாக மழைக்காலக் கூட்டத்தொடர், ஜூலை மாதத்தின் கடைசி வாரத்தில் தொடங்கும், ஆனால், இந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படுவதையொட்டி, முன்கூட்டியே தொடங்க உள்ளது. ஜனாதிபதி தேர்தலில் மக்களவை, மாநிலங்கள் அவை எம்.பி.க்கள் 776 பேரும் வாக்களிக்கும் விதமாக இந்த வசதி செய்யப்பட்டுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
