பிரதமர் மோடியின் சுதந்திர தின உரை ஏமாற்றம் அளிக்கிறது, குறிப்பிடும் படியாக ஒன்றும் இல்லை என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

காங்கிரஸ் மூத்த தலைவர ஆனந்த் சர்மா டெல்லியில் நிரூபர்களிடம் நேற்று கூறியதாவது-

உத்தரப்பிரதேச மாநிலம், கோரக்பூர் நகரில் அரசு மருத்துவமனையில் 70 பச்சிளங்குழந்தைகள் பலியானது தொடர்பாக எந்த உணர்வுப்பூர்வ பேச்சும் இல்லை. அதை தேசிய பேரிடருடன் ஒப்பிட்டு மோடி பேசிவிட்டார். பிரதமர் மோடியின் தனது அரசு தோல்வி அடைந்துவிட்டதாக கூறி இருக்க வேண்டும்.

பிரதமர் மோடியின் சுதந்திர உரை மிகவும் ஏமாற்றம் அளித்தது. 3ஆண்டுகளுக்குபின்பும், அவர் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இருப்பது அவரின் அரசின் தோல்வியையே காட்டுகிறது. குறிப்பாக இளைஞர்கள், விவசாயிகள், சமூகத்தில் நலிந்த பிரிவினர் ஆகியோருக்கு வழங்கிய வாக்குறுதிகளை அவர் நிறைவேற்றவில்லை.

நாங்கள் ஒருபோதும் காஷ்மீர் மக்களை அரவணைத்து செல்லாமல் இருந்தது இல்லை.அனைத்து தரப்பு மக்களையும் பற்றி அவர் பேச வேண்டும். காஷ்மீர் குறித்த தேசிய அளவிலான கருத்தொற்றுமையை ஏற்படுத்த வேண்டும். சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பில்லாத சூழலை  உருவாக்கி, வன்முறையை தூண்டிய அந்த அமைப்புகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சரும் இந்த சம்பவங்களை தடுத்தார்களா?  அவர்கள் ஏன் கைது செய்யப்படவில்லை?. 2 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் எனக் கூறி அதையும் நிறைவேற்றவில்லை.

 இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலர் டி. ராஜா கூறுகையில், “ பிரதமர் மோடியின் பேச்சில் எந்த விதமான, குறிப்பிடும்படியான விஷயம் ஏதும் இல்லை. காஷ்மீரில் நிலவும் பிரச்சினைக்கும், பதற்றமான சூழலுக்கும ராணுவம் மூலம் தீர்வு காணலாம் என அரசு நம்புகிறது. ஆனால், காஷ்மீர் மக்களை அரவணைத்து செல்ல வேண்டும் என்றும் கூறுகிறது.

அவர் சொல்வதில் எந்த தொடர்பும் இல்லை. மதத்தால் வன்முறையை ஏற்கமுடியாது என்று கூறும்மோடி, முதலில் ஆர்.எஸ்.எஸ். பா.ஜனதா தொண்டர்கள் வகுப்புவாத தாக்குதல் நடத்துவதை நிறுத்த வேண்டும் இந்த விஷயங்களை பிரதமர் மோடி தீவிரமாக எடுத்துக்கொண்டாரா?.பிரதமர் மோடி இளைஞர்களுக்கு தேவையான வேலைவாய்ப்புகளைபற்றி கூறவில்லை’’  எனத் தெரிவித்தார்.

தேசிய மாநாட்டுக்கட்சியின் செயல்தலைவர் உமர் அப்துல்லா கூறுகையில், “ காஷ்மீர் பிரச்சினையை துப்பாக்கி குண்டுகள் மூலம், தவறாக சித்தரிப்பது மூலம் தீர்க்க முடியாது என மோடி கூறியிருக்கிறார். ஆனால், பாதுகாப்புபடை, தீவிரவாதிகள் இருபக்கமும் சூழ்ந்துவிட்டார்கள் என நினைக்கிறேன். ஒரு வழியாக ரிசர்வ் வங்கி ரூபாய் நோட்டுகளை எண்ணி, ரூ. 3 லட்சம் கோடி என்று கூறியிருக்கிறது’’ என்றார்.