பசு பாதுகாப்பு என்ற பெயரில் நடைபெறும் படுகொலைகளை மத்திய அரசு ஊக்குவித்து வருவதாக, நாடாளுமன்ற மக்களவையில் எதிர்க்கட்சியினர் கடும் தாக்குதல் தொடுத்தனர்.

இந்தப் பிரச்சினை தொடர்பாக நேற்று நடைபெற்ற விவாதத்தை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தொடங்கி வைத்துப் பேசினார். அப்போது அவர் ‘‘இந்துஸ்தான் கொலைக்களமாக (லிஞ்சிஸ்தான்) மாற அனுமதிக்கக்கூடாது’‘ என்றார். அவர் மேலும் கூறியதாவது-

மத்திய அரசு சிறுபான்மையினர், தலித்துகள் பெண்களக்கு எதிராக உள்ளது. இந்தப் பிரிவினர் மீது அதிக அளவில் கும்பல் வன்முறை தாக்குதல்கள் நடைபெற்ற வருகின்றன. இந்த வன்முறையை எதிர்ப்பதாக பிரதமர் கூறி வருகிறார்.

அனால், இந்த வன்முறையை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று கேட்க விரும்புகிறேன். குறிப்பாக பா.ஜனதா ஆளும் மாநிலங்களில் பசு பாதுகாப்பு என்ற பெயரில் படுகொலைகள் அதிகமாக நடந்து வருகின்இந்தியாவின் நற்பெயருக்கு களங்கத்தை விளைவிக்கிறது. விஸ்வ இந்து பரிஷத், பஜ்ரங் தளம் போன்ற இந்துத்துவா அமைப்புகள் இதுபோன்ற வன்முறையில் ஈடுபட்டு வருகின்றன. இந்த அமைப்புகளுடன் பா.ஜனதாவுக்கு தொடர்பு உள்ளது.

கேரளாவில் ஆர்.எஸ்.எஸ். தொண்டர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டால் அந்த மாநில கவர்னர் போலீஸ் டி.ஜி.பி.க்கு சம்மன் அனுப்பி விசாரிக்கிறார். ஆனால், மற்ற மாநிலங்களில் நடைபெறும் படுகொலைக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை’’.

இவ்வாறு கார்கே கூறினார்.

அவருடைய குற்றச்சாட்டுகளுக்குப் பதில் அளித்த அமைச்சர் அனந்த்குமார், பசுபாதுகாப்பு என்ற பெயரில் நடைபெற்று வரும் வன்முறைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறினார்.

கார்கே குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்த பா.ஜனதா உறுப்பினர் ஹுக்கும்தேவ் நாராயண் யாதவ், ‘‘இந்த அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்துவதற்காக சிலர் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வருவதாக’‘ தெரிவித்தார்.

‘‘கேரளாவில் ஆர்.எஸ்.எஸ். தொண்டர் கொலை, காஷ்மீரில் போலீஸ் அதிகாரி அடித்துக்கொலை போன்ற சம்பவங்கள் நீங்கள் கூறும் கும்பல் படுகொலைகளுக்கு சமமானவை இல்லையா?’’ என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.