The number of millionaires in India has increased by 23.5 per cent

ஆண்டு வருமானம் ரூ.1 கோடிக்கு மேல் இருப்பவர்களின் எண்ணிக்கை 2015-16-ஆம் நிதியாண்டில் 23.5 சதவீதம் அதிகரித்துள்ளது. வருமான வரி தாக்கல் மூலம் இந்த விவரம் தெரியவந்துள்ளது.

60 ஆயிரம் கோடீஸ்வரர்கள்

2014-15 நிதியாண்டில் 48,417 பேர் தங்கள் வருமானம் ஆண்டுக்கு ரூ.1 கோடிக்கு மேல் இருப்பதாக வருமான வரித் தாக்கலின்போது தெரிவித்திருந்தனர். 2015-16-ஆம் நிதியாண்டில் இந்த எண்ணிக்கை 59,830 ஆக அதிகரித்துள்ளது.

இது 23.5 சதவீதம் அதிகமாகும். நாட்டில் உள்ள அனைவரும் முறையாக தங்கள் வருமானத்துக்கு கணக்குக் காட்டினால் இந்த எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும் என்று வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இது தொடர்பாக வருமான வரித் துறை வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:-

ரூ.500 கோடிக்கு மேல்

நாட்டில் ரூ.1 கோடி முதல் ரூ.5 கோடி வரையிலான வருமான வரம்பில் இருப்பவர்களின் எண்ணிக்கை 55,331 ஆகும். ரூ.5 கோடி முதல் ரூ.10 கோடி வரையிலான வருமான வரம்பில் 3,020 பேர் உள்ளனர். 1,156 பேர் மட்டும் ரூ.10 கோடி முதல் ரூ.25 கோடி வரை வருமானம் ஈட்டுகின்றனர்.

இந்தியாவில் ஒரே ஒரு நபர் மட்டும் தனது ஆண்டு வருமானம் ரூ.500 கோடிக்கு அதிகமாக உள்ளதாக கணக்குக் காட்டியுள்ளார். 2015-16-இல் அவரது ஆண்டு வருமானம் ரூ.721 கோடியாகும். முந்தைய நிதியாண்டில் மொத்தம் 7 பேர் தங்கள் வருமானம் ரூ.500 கோடிக்கு மேல் இருப்பதாக கணக்குக் காட்டியிருந்தனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.