மக்களே உஷார்.. ஒரே நாளில் 893 பேர் பலி.. அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்..
இந்தியாவில் கொரோனாவால் உயிரிழப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்தியா, கொரோனா வைரஸ் தொற்றின் மூன்றாவது அலைக்கு எதிராக போராடி வருகிறது. கடந்த 21-ந் தேதி ஒரு நாள் தொற்று பாதிப்பு 3 லட்சத்து 47 ஆயிரத்து 254 அளவுக்கு அதிகரித்தது. அதன்பின்னர் இது தொடர்ந்து குறைந்து வருகிறது.
தற்போது மராட்டியம், உத்தரபிரதேசம், டெல்லி, ஒடிசா, அரியானா, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் தினசரி தொற்று பாதிப்பு விகிதம் குறைந்துள்ளது. நாட்டின் குறிப்பிட்ட மாநிலங்களில், யூனியன் பிரதேசங்களில் தொற்று பாதிப்பு குறைந்து உள்ளது.
அந்த வகையில் கடந்த 27-ந் தேதி 2 லட்சத்து 86 ஆயிரத்து 384 பேருக்கு கொரோனா ஏற்பட்டது. அது நேற்று முன்தினம் 28-ந் தேதி 2 லட்சத்து 51 ஆயிரத்து 209 ஆக குறைந்தது. நேற்று (29-ந் தேதி) இது மேலும் குறைந்து 2 லட்சத்து 35 ஆயிரத்து 532 ஆக பதிவானது. இந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு மேலும் சரிந்துள்ளது.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்ட தகவலின் படி, 'இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்து 34 ஆயிரத்து 281- ஆக உள்ளது. கொரோனா பாதிப்பால் ஒரே நாளில் 893- பேர் உயிரிழந்துள்ளனர். தொற்றில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 3 லட்சத்து 52 ஆயிரத்து 784- ஆக உள்ளது. கொரோனா தொற்று பாதிப்பு விகிதம் 14.50 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.