Andaman Earthquake : அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது.

அந்தமானில் நிலநடுக்கம் :

வங்கக்கடல் பகுதியில் அமைந்துள்ள அந்தமான் தீவுகளில் (Andaman) இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதிகாலை 2.52 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. திக்லிபூரில் இருந்து வடக்கே 147 கிலோமீட்டர் தொலைவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவாகியுள்ளதாகத் தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது. 

இது குறித்து தேசிய புவியியல் மையம் தனது ட்விட்டரில், 'ரிக்டர் அளவுகோலில் 4.4 என்ற புள்ளிக் கணக்கில் இன்று அதிகாலை 2.52 மணிக்கு அந்தமான் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது திக்லிபூர், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கு வடக்கே 147 கிலோமீட்டர் தொலைவில் ஏற்பட்டது' என்று கூறியுள்ளது.

நிலநடுக்கம் - சேதம் என்ன ? :

இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்பு எதுவும் ஏற்பட்டதாகத் தகவல் வெளியாகவில்லை. அதேபோல பொருள் சேதம் குறித்தும் இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்படவில்லை. இன்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கத்தை (Earthquake) உணர்ந்த மக்கள், வீடுகளை விட்டு அலறி அடித்துக் கொண்டு வெளியே வந்தனர். 

இதேபோல கடந்த வாரம் தைவான் தலைநகர் தைபேயில் இருந்து 182 கி.மீ தெற்கே நிலநடுக்கம் ஏற்பட்டது. சுமார் 15 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.இதனால் கட்டடங்கள் குலுங்கின. முதலில் ஏற்பட்ட நிலநடுக்கம் 5.7 என பதிவாகியுள்ளது. இரண்டாவது முறையாக ஏற்பட்டதுதான் சக்திவாய்ந்த நிலநடுக்கமாக பதிவாகியுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் தைவானின் கிழக்கு கடற்கரை பகுதியில் அமைந்துள்ள ஹூயலியென் நகரத்தின் கிழக்கே 56 கி.மீ தூரத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கம் நிலப்பரப்பிலிருந்து 19 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இதனால் மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.