Asianet News TamilAsianet News Tamil

முத்தலாக் முறை செல்லாது என அறிவித்தால் புதிய சட்டம் -உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம்

The Muthalak system is not clear that the new law - the federal government argument in the court of justice
the muthalak-system-is-not-clear-that-the-new-law---the
Author
First Published May 15, 2017, 10:06 PM IST


முஸ்லிம்கள் விவகாரத்து பெறும் முத்தலாக் முறை செல்லாது என அறிவிக்கப்பட்டால், இஸ்லாமிய திருமணம், விவாகரத்து தொடர்பாக புதிய சட்டம் கொண்டு வருவோம் என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

உயர்நீதிமன்ற உத்தரவு

முஸ்லிம்கள் மூன்று முறை ‘தலாக்’ என்று கூறி விவகாரத்து செய்யும் நடைமுறையை பின்பற்றி வருகின்றனர். இஸ்லாமிய சிவில் சட்டங்களின் அடிப்படையில் இந்த முறை பின்பற்றப்படுகிறது. இதில் பெண்கள் அதிகளவில் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதுதொடர்பாக உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம் முத்தலாக் விவகாரம் பெண்களின் உரிமையை பாதிப்பதாக கூறியது.

5 நீதிபதிகள் விசாரணை

இந்த நிலையில் முஸ்லிம்களின் முத்தலாக் விவகாரம், பலதார திருமணம் மற்றும் ‘நிக்காஹ் ஹலாலா’ ஆகிய 3 விவகாரங்கள் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. இதனை தலைமை நீதிபதி ஜே.எஸ். கேஹர் தலைமையிலான நீதிபதிகள் குரியன் ஜோசப், ஆர்.எப்.நாரிமன், யு.யு. லலித் மற்றும் அப்துல் நசீர் ஆகிய 5 நீதிபதிகளை உள்ளடக்கிய `அரசமைப்பு சட்ட அமர்வு' விசாரணை மேற்கொண்டுள்ளது.

6 நாட்கள் வாதம்

நாளுக்கு நாள் முத்தலாக் விவகாரம் சர்ச்சைகளை ஏற்படுத்தி வந்ததால், அதனை விரைந்து முடிக்க திட்டமிட்ட அமர்வு, கடந்த 11-ந்தேதியில் இருந்து முழு வீச்சில் விசாரிக்க தீர்மானித்தது. இதற்காக 6 நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. 3 நாட்களில் முத்தலாக் முறையை ஆதரித்தும், மற்ற 3 நாட்களில் அதனை எதிர்த்தும் வழக்கறிஞர்கள் தங்களது வாதங்களை முன்வைப்பார்கள். அதன்படி கடந்த வியாழன், வெள்ளிக் கிழமைகளில் நீதிபதிகள் இந்த வழக்கை விசாரித்தனர்.

தனி நீதிமன்றங்கள்

வெள்ளியன்று இந்த வழக்கில் மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி மற்றும் ஆரிப் முகமது கான் ஆகியோர் ஆஜராகி முத்தலாக் முறைக்கு எதிரான வாதங்களை முன் வைத்தனர். இந்த வழக்கில் மனுதாரரும் வழக்கறிஞருமான பர்கா பைஸ் தனது வாதத்தில், ‘‘முத்தலாக் முறைக்கு தடை விதிக்க வேண்டும். இதனை முஸ்லிம் மத குருக்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி தனியாக போட்டி நீதிமன்றத்தை நடத்துகின்றனர். மேலும் விவகாரத்து பெறுவதற்கு நீதிமன்றங்களுக்கு செல்லக் கூடாது என்று அவர்கள் முஸ்லிம்களை வற்புறுத்துகின்றனர்.’’ என்று கூறினார். இதனை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு, ‘முத்தலாக் முறைக்கு எதிராக மிகவும் முக்கியமான கருத்தை வழக்கறிஞர் பைஸ் கூறியுள்ளார்’ என்று தெரிவித்து, வழக்கறிஞர் கருத்தை ஏற்றுக்கொண்டனர்.

அரசின் நிலைப்பாடு

மேலும், முத்தலாக் முறை நிறுத்தப்பட்டால் அதன்பின்னர் மத்திய அரசு எந்த மாதிரியான நடவடிக்கையை மேற்கொள்ளும் என்றும் அவர்கள் கேள்வி எழுப்பினர். இந்நிலையில் முத்தலாக் விவகாரம் குறித்து மத்திய அரசின் நிலைப்பாட்டை அரசு தலைமை வழக்கறிஞர் முகுல் ரோகத்கி நீதிமன்றத்தில் நேற்று எடுத்துரைத்தார். அவர் வாதிடும்போது, ‘‘முத்தலாக் முறைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தால், அதற்கு மாற்றாக முஸ்லிம்களின் திருமணம், விவகாரத்தை ஒழுங்குபடுத்தும் வகையில் புதிய சட்டங்களை மத்திய அரசு கொண்டு வரும்.

‘போதிய நேரம் இல்லை’

இதேபோன்று முஸ்லிம்களின் விவகாரத்து தொடர்பான நிக்கா ஹலாலா மற்றும் பலதார மணம் ஆகியவையும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இந்த விவகாரங்கள் குறித்தும் விசாரணை நடத்தப்படுமா என்பதை நீதிமன்றம் தெளிவுபடுத்த வேண்டும்’’ என்றார்.

இதற்கு, ‘மிகக்குறைந்த கால அவகாசமே நம்மிடத்தில் உள்ளது. எனவே முத்தலாக் குறித்து மட்டுமே இப்போதைக்கு விசாரிக்க முடியும். மற்ற 2 விவகாரங்கள் குறித்து வருங்காலத்தில் விசாரணை நடத்துவோம்’ என்று நீதிபதிகள் பதில் அளித்தனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios