புற்று நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த தனது மகனின் விந்தணுவை பயன்படுத்தி பெண் ஒருவர் இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார்.

புனேவைச் சேர்ந்தவர் ராஜஸ்ரீ. இவரது கணவர் விபத்து ஒன்றில் இறந்துவிட மகன் பிரதமேசுடன் வசித்து வந்தார். மிகவும் கஷ்டப்பட்டு தன் மகனை அந்தத் தாய் படிக்க வைத்தார். பின்னர் மேற்படிப்புக்காக பிரதமேஷ்  ஜெர்மன் சென்றார். அங்கு படித்துக் கொண்டிருந்தபோது பிரதமேசுக்கு மூளையில் புற்று நோய் இருந்தது தெரியவந்தது.

இதனால் நொறுங்கிப் போன தாய் ராஜஸ்ரீ சிறப்பான வைத்தியம் பார்த்தார்.ஹீமோதெரபி உள்ளிட்ட பல சிகிச்சைகள் அவருக்கு கொடுக்கப்பட்டன. இந்த மருத்துவ சிகிச்சை கொடுத்துக் கொண்டிருந்தபோதே பிரதமேசின் விந்தணு சேகரிக்கப்பட்டு ஜெர்மனியில் உள்ள விந்தணு வங்கியில் பாதுகாக்கப்பட்டது.

புற்றுநோய் முற்றியதையடுத்து அவருடைய கண் பார்வை பறிபோனது. கை, கால்கள் செயலிழந்தன. ஒரு கட்டத்தில் பிரதமேஷ் உயிரிழந்தார். அவரின் தாய் தங்கள் குடும்பத்திற்கு ஒரு வாரிசு இல்லாமல் போய்விட்டதே என மிகுந்த மன வருத்தத்தில் இருந்தார்.

அப்போதுதான் ராஜஸ்ரீக்கு அந்த ஐடியா கிளிக் ஆனது. உடனடியாக ஜெர்மனில் உள்ள விந்தணு வங்கியை அணுகினார். அங்கு சேமித்து வைக்கப்பட்டிருந்த தனது மகன் பிரதமேசின் விந்தணுவை பயன்படுத்தி தானே ஒரு வாடகைத் தாயாக மாறினார்.

மகனின் மகன்களையே தனது வயிற்றில் சுமக்கிறோம் என்ற கர்வத்துடன் வாழ்ந்து வந்த ராஜஸ்ரீக்கு அண்மையில் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளன. தற்போது  தனது குடும்பத்தின் வாரிசுகளான அந்த இரட்டைக் குழந்தைகளை கண்ணும் கருத்துமாக வளர்த்து  வருகிறார்.