40 கோடி அமைப்பு சாரா தொழிலாளர்கள் பயன் பெறும் வகையில் அனைவருக்கும் குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயம் செய்யும், ‘ஊதிய நெறிமுறைச் சட்ட மசோதாவை’ மக்களவையில் நேற்று மத்திய அரசு அறிமுகம் செய்தது.

இந்த ஊதிய நெறிமுறைச் சட்ட மசோதாவில், தொழிலாளர்களின் ஊதியம், ஊக்கத்தொகை ஆகியவற்றில் திருத்தம் கொண்டு வந்து ஒருங்கிணைக்கப்பட உள்ளது.

ஊதியச் சட்டம் 1936, குறைந்தபட்ச ஊதியச் சட்டம் 1948, போனஸ் சட்டம் 1965, சமமான ஊதியச் சட்டம் 1976 ஆகியவற்றை ஒருங்கிணைத்து இந்த மசோதா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த மசோதாவை மக்களவையில் அறிமுகம் செய்து, மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் பண்டாரு தத்தரேயா பேசியதாவது-

அமைப்புசாரா தொழிலில் ஈடுபட்டுள்ள 40 கோடி தொழிலாளர்கள் நலனுக்காக அனைவருக்கம் குறைந்தபட்ச ஊதியச் சட்ட மசோதா அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்த மசோதாவில் 4 வகையான சட்டங்கள் ஒருங்கிணைக்கப்படுகின்றன. இந்த மசோதா சட்டமாகும் போது, தொழிலாளர்களின் உரிமை சுரண்டப்படாது. தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதிய முறையில் மிகப்பெரிய வரலாற்று மாற்றத்தை ஏற்படுத்தும். நாட்டில் முதல் முறையாக குறைந்தபட்ச ஊதியச்சட்டம் நடைமுறைக்கு வரும்.

தொழிலாளர் துறை செயலாளர்கள், மாநிலங்களின் அமைச்சர்கள் ஆகியோருடன் கலந்தாய்வு செய்து, இந்த வரைவு மசோதா தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 40 கோடி தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் கிடைக்க வழி ஏற்படும். தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பையும் அதிகரிக்கும், தொழில்முனைவோர்களையும் ஈர்க்கும். 44 தொழிலாளர் சட்டங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு, 4 வகையான விதிகளாக மாற்றப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த மசோதாவுக்கு புரட்சி சோஷலிஸ்ட்(ஆர்.எஸ்.பி.) எம்.பி. என்.கே. பிரேமசந்திரன் குறுகிய காலத்தில் இந்த மசோதாவை அரசு அறிமுகம் செய்கிறது எனக் கூறி எதிர்ப்புத் தெரிவித்தார். ஆனால், அரசே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, விவாதம் பின்னர் நடைபெறும் என அ ரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.