The mid-term election should not be announced by 20 MLAs
ஆம் ஆத்மி 20 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் வழக்கில் 20 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கக் கூடாது என்று டெல்லி உயர்நீதிமன்றம் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளது.
டெல்லியில் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. கடந்த 2015ம் ஆண்டு டெல்லியில் அமைச்சர்களுக்கு உதவியாக 20 எம்.எல்.ஏக்களை செயலர்களாக முதல்வர் கேஜ்ரிவால் நியமித்தார்.
இதற்காக டெல்லி மாநில சட்டமன்றத்தில் சிறப்பு மசோதாவும் நிறைவேற்றப்பட்டது. பின், குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்டது. டெல்லி மாநில அரசுக்கான சட்டத்தின் படி, முதல்வர் அலுவலகத்துக்கு மட்டுமே ஒரு செயலரை நியமிக்க முடியும். ஆனால், முதல்வர் கேஜ்ரிவாலோ 20 செயலர்களை நியமித்தார்.
இதையடுத்து 20 எம்.எல்.ஏக்களும் ஆதாயம் தரும் இரட்டை பதவி வகிப்பதாக கூறி பிரசாந்த் படேல் என்ற வழக்கறிஞர் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தார்.
இதை விசாரித்த தேர்தல் ஆணையம், எம்.எல்.ஏ பதவியில் இருந்து உங்களை ஏன் தகுதிநீக்கம் செய்யக்கூடாது என கேள்வி எழுப்பியதோடு, இதுதொடர்பாக விளக்கமளிக்குமாறு உத்தரவிட்டது. இதையடுத்து ஆம் ஆத்மி கட்சியின் 20 எம்.எல்.ஏக்களின் சார்பில் தேர்தல் ஆணையத்திடம் விளக்கமளிக்கப்பட்டது.
இதைதொடர்ந்து ஆம்ஆத்மி எம்.எல்.ஏக்கள் 20 பேரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்ற தேர்தல் ஆணையம் ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்திருந்தது.
இதையடுத்து, 20 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கத்துக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.
இந்நிலையில் ஆம் ஆத்மி 20 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் வழக்கில் 20 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கக் கூடாது என்று டெல்லி உயர்நீதிமன்றம் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளது.
