உனக்கென்ன கொம்பா முளைத்திருக்கிறது? என சக மனிதர்களிடம் நாம் வேடிக்கையாக கேட்பதுண்டு. ஆனால் உண்மையிலேயே ஒருவருக்கு தலையில் கொம்பு முளைத்து இருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

ஆடு, மாடு சில விலங்கினங்களுக்கு கொம்பு முளைப்பது இயற்கை.  அந்த வகையில் மத்தியப்பிரதேச மாநிலம், ரஹ்லி கிராமத்தில் வசித்து வரும் 74 வயதான விவசாயி ஷ்யாம் லால் யாதவ்.   அவருக்கு 2014-ம் ஆண்டு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது.  அதனைத் தொடர்ந்து நகம் போன்று சிறிய அளவில் தலையில் முளைக்கத் தொடங்கி இருக்கிறது. 

ஒவ்வொரு முறையும் முடிவெட்டிக்கொள்ள செல்லும்போது அதனை அவ்வப்போது  நறுக்கிவிட்டு வந்துள்ளார். ஆனாலும் மீண்டும் மீண்டும் அந்த இடத்தில் முளைத்துக் கொண்டே வந்துள்ளது. ஒரு கட்டத்தில் அதை நறுக்குவதை விட்டு விட்டார் முதியவர் ஷ்யாம். பிறகு 10 சென்டி மீட்டர் வரை வளர்ந்து கொம்பு போல தோன்றியதால் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.  சாகர் நகரில் உள்ள பாக்யோதய் டிர்த் மருத்துவமனையில் மருத்துவர் விஷால் கஜ்பியே அறுவை சிகிச்சை மேற்கொண்டார்.

74 வயதான விவசாயி அறுவை சிகிச்சைக்காக 10 நாட்கள் மருத்துவமனையில் தங்கியிருந்தார். பரிசோதனைகளுக்குப் பின், கொம்பு வெற்றிகரமாக அகற்றப்பட்டது. தலை முடி மற்றும் நகம், கொம்பு ஆகியவற்றின் வளர்ச்சிக்கு காரணமாக கூறப்படும் கெரட்டின் என்கிற தசை புரோட்டீனில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே அந்த விவசாயிக்கு தலையில் கொம்பு முளைத்ததாகக் கூறப்படுகிறது.

இது புற்றுநோய் தன்மை கொண்டதாகவும் இருக்கலாம், புற்றுநோய்த் தன்மை இல்லாததாகவும் இருக்கலாம் என அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். முதியவருக்கு தலையில் கொம்பு முளைத்தது ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.