சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழிலும் தீர்ப்புகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதிகளுக்கு ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் ஆலோசனை தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் 2 நாட்கள் பயணமாக தமிழகத்துக்கு கடந்த சனிக்கிழமை வந்திருந்தார். ராமேஸ்வரம் கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் வழிபாடு செய்த அவர், சென்னை வந்து, ஆளுநர் மாளிகையில் தங்கினார்.

அப்போது, உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு அழைப்பு விடுத்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், அவர்களுடன் ஆளநர் மாளிகை தர்பார் அரங்கில் ஆலோசனை நடத்தினார். அப்போது, ஆளுநர் பன்வாரி லால் புரோகித்தும் உடன் இருந்தார்.

உயர் நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும் என்று வழக்கறிஞர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகிறார்கள், அதுமட்டுமல்லாமல், நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்புகளையும் தமிழிலும் மொழிபெயர்க்க வேண்டும் என்று நீதிபதிகளிடம் ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் கேட்டுக்கொண்டார்.

மேலும், தமிழில் தீர்ப்புகளை வழங்கினால்தான் வழக்கு தொடுத்தவர்கள் என்னவிதமான உத்தரவுகளை நீதிபதிகள் வழங்கி இருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள முடியும் மாநில மொழிகள் நீதிமன்றத்தில் பயன்படுத்தாமல், மக்களுக்கு முழுமையாக பணியாற்ற முடியாது.

இதேபோன்ற ஆலோசனைகளை கேரளா, மஹாராஷ்டிரா, பீகார், ஜார்கண்ட், ஓடிசா ஆகிய மாநிலங்களின் நீதிபதிகளிடம் வழங்கி இருக்கிறேன் என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கூறுகையில், “ சட்ட நூல்களை தமிழில் கண்டிப்பாக மொழி பெயர்க்க வேண்டும்’’ என வலியுறுத்தியுள்ளார்.

இதையடுத்து, பேசிய ஒரு நீதிபதி, சட்டக்கல்லூரியில் நடக்கும் மாணவர்களுக்கான மாதிரி நீதிமன்றங்களில் தமிழில்தான் வாதங்கள் நடக்கின்றன’’ என்று தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ராம் நாத் கோவிந்தின் யோசனையை ஏற்க முதலில் தயங்கிய நீதிபதிகள் பின்னர் மக்களுக்கு நீதிமன்ற தீர்ப்புகள் சென்றடைய ஆலோசனை வழங்கியதற்காக நன்றி தெரிவித்துக்கொண்டனர்.