The luxury marriage of 175 pounds gold jewelry in kerala
கேரளாவில் எளிய முறையில் திருமணம் நடத்த வேண்டும் என்று சட்டம் கொண்டு வர சட்டசபையில் கட்சிகள் விவாதித்துக் கொண்டு இருக்கிறார்கள்.
ஆனால், அதை எல்லாம் காற்றில் பறக்கவிடுவது போல், ஆளும் கட்சியைச் சேர்ந்த கம்யூனிஸ்ட் பெண் எம்.எல்.ஏ. ஒருவர் தனது மகளின் திருமணத்தை ஆடம்பரமாக நடத்தி உள்ளார்.
திருச்சூர் அருகே நத்திகா தொகுதி எம்.எல்.ஏ.வான கீதா கோபிதான் தனது மகளின் திருமணத்தை தடபுடலாக நடத்தி இருக்கிறார்.
இதுதான் கம்யூனிஸ்ட்காரர்களின் எளிமையா? என்று கேள்வி கிளம்ப தொடங்கியது. இதையடுத்து, இது குறித்து கட்சி மேலிடம் கீதாகோயிடம் அவரிடம் விளக்கம் கேட்டுள்ளது.
நத்திகா தொகுதி சி எம்.எல்.ஏ.வான கீதா சமீபத்தில் குருவாயூரில் உள்ள பூந்தனம் அரங்கில் தனது மகள் திருமணத்தை நடத்தினார்.

இந்த விழாவில் கீதாவின் மகள் கழுத்து நிறைய தங்க நகைகள், கை நிறைய விதவிதமான தங்க வளையல்கள் என 175 பவுன் நகை அணிந்து மிக ஆடம்பரமாக காட்சியளித்தார்
நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த கீதா கோபி எம்.எல்.ஏ.வுக்கு சொத்துக்கள் ஏதும் குறிப்பிடும் படியாக இல்லை. இவரின் கணவர் கோபி குருவாயூர் தேவஸ்தானத்தில் சாதாரண ஊழியராக இருக்கிறார்.
இந்த திருமணம் குறித்த புகைப்படங்கள் பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது.
இதைப் பார்த்த சி.பி.எம். தலைவர்கள், இந்திய இளைஞர் மாணவர் அமைப்பினர் ஆகியவை கீதா கோபியை கடுமையாக விமர்சிக்கத் தொடங்கினர். கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் விதத்தில் கீதா நடந்துகொண்டுவிட்டார்.

எளிமையாக இருக்க வேண்டும் என்று வார்த்தையில் கூறினால் போதாது, செயலில் இருக்க வேண்டும் என விமர்சனம் செய்தன. இதற்கு முன்பு இருந்த எம்.எல்.ஏ. பினோய் விஸ்வம் தனது 2 மகள்களுக்கு மிக எளிமையாக திருமணம் செய்துவைத்தார். இவரைப் பின்பற்றுங்கள் என்று காட்டமாக தெரிவித்தனர்.
இது குறித்து கீதா கோபியிடம், மலையாள நாளேடு நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அவர் கூறுகையில், “ நான் எதையும் வரம்பு மீறி செய்யவில்லை.
எங்கள் பாரம்பரியத்தில் என்ன செய்யச் சொல்லி இருக்கிறதோ அதைத்தான் எனது மகளுக்கு செய்தேன். ஒரு தாயாக நான் எனது மகளுக்கு நகைகள் அணிவிக்க கூடாதா. என்னுடைய செலவு என்பது 50 சவரன் நகைகள்தான். மற்ற நகைகள் எனது உறவினர்கள் பரிசாக அளித்தது. திருமணத்துக்கு கூட ஒரு நபர் சாப்பாட்டுக்கு ரூ.50 தான் செலவு செய்தேன்.’’ எனத் தெரிவித்தார்.
ஆனால் இந்த விளக்கத்தை ஏற்றுக்கொள்ளாத சி.பி.ஐ. மாநில இணைச் செயலாளர் பிரகாஷ் பாபு கூறுகையில், “ ஆடம்பரம் என்பதை கட்சி ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது.
கட்சியின் தொண்டர்களுக்கும், தலைவர்களுக்கும் விதிமுறைகள் இருக்கிறது. அந்த விதிமுறைகளை எம்.எல்.ஏ.கூட மீறாமல் நடந்து கொள்ள வேண்டும்.
இது குறித்து திருச்சூர் மாவட்ட செயலாளர் கீதா கோபியிடம் விளக்கம் பெற்று அனுப்ப உத்தரவிட்டுள்ளோம்’’ என்றார்.
கீதா கோபின் கட்சிக் காரரும், வேளாண்துறை அமைச்சருமான முள்ளக்கரை ரத்னாகரன் சமீபத்தில் சட்டசபையில் பேசும்போது, “ ஆடம்பரமாக திருமணங்கள் நடப்பதை தடுக்கும் சட்டம் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தினார். இதற்கு பதில் அளித்த முதல்-அமைச்சர் பினராயி விஜயன் “திருமணத்துக்கு குறிப்பிட்ட அளவுதான் செலவு செய்ய வேண்டும் என யாரையும் உத்தரவு போட முடியாது என்று கூறினார்.
