சானிடைஸர்கள் கைகளை சுத்தப்படுத்தும்போது ஆல்கஹால் நிறைந்த மதுபானங்களை குடித்தால் அது தொண்டையில் உள்ள வைரஸ்களை அழிக்கும் என முதல்வருக்கு எம்.எல்.ஏ ஒருவர் கடிதம் எழுதி பரபரப்பை கிளப்பி இருக்கிறார்.

கொரோனா நோய்த் தொற்றால் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மதுபான கூடங்கள் மூடப்பட்டிருக்கின்றன. இதனால் குடிமகன்கள் தவியாய் தவித்து வருகின்றனர். சில இடங்களில் மது கிடைக்காமல் தற்கொலை செய்து வருபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. சிலர் மாற்று போதைக்கு முற்பட்டு உயிரிழக்கும் சம்பவங்களும் நடந்து வருகின்றன.

இந்நிலையில், மதுக்கடைகளை திறக்க வேண்டும் என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ ஒருவர் கடிதம் எழுதியுள்ளார். ஊரடங்கு காலத்தில் மதுக்கடைகளை மட்டும் திறக்கலாம் என யோசனை தெரிவித்து ராஜஸ்தான் மாநிலம் சங்கோட் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ பரத் சிங், முதல்வர் அசோக் கெலாட்டுக்கு கடிதம் எழுதியுள்ளார், அதில் மது குடிப்பது தொண்டையில் உள்ள கொரோனா வைரஸை அழிக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆல்கஹால் நிறைந்த சானிடைசர்களை கொண்டு கழுவும் போது கைகளில் உள்ள கொரோனா வைரஸ் நீக்கப்படும் என்றால் ஆல்கஹால் நிறைந்த மது குடித்தால் அது தொண்டையில் உள்ள வைரஸையும் நிச்சயம் நீக்கும் என எம்.எல்.ஏ தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

மது குடிப்பது கள்ளச்சாராயம் அருந்துவதற்கு மேலானது. மதுக்கடைகள் மூடப்பட்டு இருப்பதால் கள்ளச்சாராய விற்பனை அதிகரித்துள்ளது. இது மக்களின் உயிர்களை பலிவாக்குவதுடன், அரசுக்கும் வருவாய் இழப்பை ஏற்படுத்தும்’’என்று தெரிவித்துள்ளார். ஜப்பானில் சானிடைஸருக்கு பதிலாக ஓட்கா மதுபானத்தை பயன்படுத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.