1990-களில் காஷ்மீரில் இருந்து வெளியேற்றப்பட்ட பண்டிட்கள் குறித்த உண்மை சம்பவத்தை தழுவிய கதையம்சம் கொண்டதாக கூறி ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ என்ற படம் எடுக்கப்பட்டிருக்கிறது. இந்தப் படம் கடந்த 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படத்தைப் பார்த்த பிரதமர் மோடி படக் குழுவுக்கு பாராட்டு தெரிவித்தார்.
‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் இட்டுக்கட்டப்பட்ட கதை என்று ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா குற்றம் சாட்டியிருக்கிறார்.
1990-களில் காஷ்மீரில் இருந்து வெளியேற்றப்பட்ட பண்டிட்கள் குறித்த உண்மை சம்பவத்தை தழுவிய கதையம்சம் கொண்டதாக கூறி ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ என்ற படம் எடுக்கப்பட்டிருக்கிறது. இந்தப் படம் கடந்த 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படத்தைப் பார்த்த பிரதமர் மோடி படக் குழுவுக்கு பாராட்டு தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து படத்தைப் பார்த்து பாஜகவினர் பாராட்டி வருகிறார்கள். மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இந்தப் படத்துக்கு வரி விலக்கு சலுகை அளிக்கப்பட்டுள்ளன. பாஜகவினர் படத்தை கொண்டாடி வரும் நிலையில், உண்மைக்கு மாறாகப் படம் எடுக்கப்பட்டிருப்பதாக காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

தொடர்ந்து கலவையான விமர்சனங்களை ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படம் பெற்று வரும் நிலையில், காஷ்மீர் முன்னாள் முதல்வரும் தேசிய மாநாட்டு கட்சி செயல் தலைவருமான உமர் அப்துல்லா விமர்சனம் செய்துள்ளார். இப்படம் பற்றி குல்காம் மாவட்டத்தில் உமர் அப்துல்லா பேட்டி அளித்துள்ளார். “ ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் ஒரு இட்டுக்கட்டப்பட்ட கதை. இது ஓர் ஆவணப்படமா அல்லது வணிகப் படமா என்பது தெளிவாகத் தெரியவில்லை. படம் யதார்த்தத்தை அடிப்படையாகக் கொண்டது என்று தயாரிப்பாளர்கள் கூறுகிறார்கள். ஆனால் படத்தில் பல பொய்கள் திட்டமிட்டு காட்சிப் படுத்தப்பட்டுள்ளன. இதுதான் உண்மை.

1990-ஆம் ஆண்டில் தேசிய மாநாட்டுக் கட்சி ஆட்சியில் இருந்தது என்பதே மிகப்பெரிய பொய். காஷ்மீர் பண்டிட்டுகள் வெளியேறியபோது காஷ்மீரில் ஆளுநர் ஆட்சிதான் இருந்தது. மத்தியில் வி.பி. சிங் தலைமையிலான பா.ஜ.க.வின் ஆதரவு அரசுதான் இருந்தது. அப்போது காஷ்மீர் பண்டிட்கள் மட்டும் புலம்பெயரவில்லை; கொல்லப்படவும் இல்லை. முஸ்லிம்கள், சீக்கியர்களும் கொல்லப்பட்டனர். அவர்களும் காஷ்மீரில் இருந்து புலம்பெயர வேண்டியிருந்தது. இன்னும் அவர்களால் காஷ்மீருக்குள் திரும்பி வர முடியவில்லை. காஷ்மீர் பண்டிட்களை பாதுகாப்பாக அழைத்து வர தேசிய மாநாட்டுக் கட்சிதான் பங்களிப்பை தொடர்ந்து செய்து வருகிறது” என்று உமர் அப்துல்லா தெரிவித்தார்.
