The interest rate for home and vehicle loan is not likely to decrease

இந்திய ரிசர்வ் வங்கி தனது டிசம்பர் மாத நிதிக் கொள்கை ஆய்வு கூட்டத்தில் முக்கிய கடனுக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யவில்லை. இதனால் தற்சமயம் வீடு மற்றும் வாகன கடனுக்கான வட்டி விகிதம் குறைய வாய்ப்பில்லை என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.

2 மாதத்துக்கு

ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை ஆய்வு கூட்டம் 2 மாதத்துக்கு ஒரு முறை நடைபெறுகிறது. அந்த கூட்டத்தில் ரிசர்வ் வங்கியின் 6 பேர் கொண்ட நிதிக்கொள்கை குழு முக்கிய கடனுக்கான வட்டி விகிதத்தில் (ரெப்போ ரேட்) மாற்றம் செய்வது குறித்து முடிவு எடுக்கும். சில்லரை விலை பணவீக்கத்தை கணக்கில் கொண்டே ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களில் மாற்றம் செய்வது குறித்து முடிவு எடுக்கும்.

தற்போது நிதிக் கொள்கை வட்டி விகிதம் 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகவும் குறைவாக 6 சதவீதமாக உள்ளது. ரிசர்வ் வங்கி கடைசியாக கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ரெப்ரோ ரேட்டை 0.25 சதவீதம் குறைத்தது. கடந்த அக்டோபர் மாத ஆய்வு கூட்டத்தில் வட்டி விகிதங்களில் ரிசர்வ் வங்கி மாற்றம் செய்யவில்லை.

ஆய்வறிக்கை

இந்த நிலையில் 2017-18ம் நிதி ஆண்டுக்கான இந்திய ரிசர்வ் வங்கியின் 5வது நிதிக் கொள்கை ஆய்வு கூட்டம் கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கியது. கடைசி நாளான நேற்று கூட்டம் முடிவடைந்த பிறகு ஆய்வறிக்கையை ரிசர்வ் வங்கி வெளியிட்டது.

டிசம்பர் மாத நிதிக் கொள்கை ஆய்வு கூட்டத்தில் ரிசர்வ் வங்கி குறுகிய கால கடனுக்கான (ரெப்போ ரேட்) வட்டி விகிதத்தில் எந்தவித மாற்றங்களும் செய்யவில்லை. அதேசமயம் டிசம்பர் மற்றும் மார்ச் காலாண்டுக்கான சில்லரை விலை பணவீக்கம் குறித்தான தனது மதிப்பீட்டை 0.10 சதவீதம் அதிகரித்துள்ளது.

பொருளாதார வளர்ச்சி

டிசம்பர் மற்றும் மார்ச் காலாண்டுகளில் பணவீக்கம் 4.3 முதல் 4.7 சதவீதம் என்ற அளவில் இருக்கும் என்ற தற்போது ரிசர்வ் வங்கி மதிப்பீடு செய்துள்ளது. 2017-18ம் நிதி ஆண்டுக்கான இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்த தனது மதிப்பீட்டில் எந்தவித மாற்றமும் இன்றி தொடர்ந்து 6.7 சதவீதமாக வைத்துள்ளது.

ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை ஆய்வு கூட்டம் குறித்து ராய்டர்ஸ் நிறுவனம் 54 பொருளாதார நிபுணர்களிடம் கருத்து கேட்டு இருந்தது. அதில் 52 நிபுணர்கள் ரிசர்வ் வங்கி கடனுக்கான வட்டியில் மாற்றம் செய்யாது என்றே கணித்து இருந்தனர்.